Close

Election – voter Awareness -sveep – baloon

Publish Date : 15/04/2024
.

செ.வெ.எண்:-22/2024

நாள்:-08.04.2024

திண்டுக்கல் மாவட்டம்

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்ட ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பறக்கவிட்டார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்ட ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(08.04.2024) பறக்கவிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, தமிழகத்தில் வரும் 19.04.2024 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதைமுன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைவரும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிட தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில், விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள், பேரணி, மனித சங்கிலி என வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று(08.04.2024) தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்ட ராட்சத பலூன் பறக்க விடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்து கல்லுாரிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தகுதியுள்ள அனைவருடைய பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அனைவரும் வாக்குப்பதிவு மேற்கொண்டு, ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு நாளன்று(19.04.2024) சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிக்கு செல்ல இயலாத 85 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையிலும், பணி காரணமாக வாக்குச்சாவடிக்கு செல்ல இயலாத பத்திரிகையாளர்கள் வாக்களிக்கும் வகையில் விருப்பப் படிவம்(Form 12D) வழங்கப்பட்டு அவர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்களிக்க வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சென்று வாக்குப்பதிவு செய்திடும் வகையில் சாய்வுதள நடைமேடை, சக்கர நாற்காலிகள், குடிநீர், கழிப்பறை வசதி, வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர் தகவல் சீட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடு தேடி வழங்கப்பட்டு வருகிறது. . வாக்காளர் தகவல் சீட்டிலும் வாக்காளர் பெயர், வாக்குச்சாவடி, பாகம், வரிசை எண் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

இந்தியாவில் மட்டுமே தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது முதல் வாக்குப்பதிவு செய்வது வரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் முறையான அறிவிப்புகள், விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நமக்கு விருப்பமான தலைவரை, ஆட்சியாளரை தேர்வு செய்ய இது நமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. இதை தவறவிட்டால் பிறகு வாய்ப்பு கிடைக்காது. எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி வாக்குப்பதிவு செய்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும், என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மண்டல மேலாளர் திரு.அருணாச்சலம், கனரா வங்கி உதவிப் பொது மேலாளர் திரு.பல்லானி ரங்கநாத், திண்டுக்கல் பாரத ஸ்டேட் வங்கி உதவிப்பொது மேலாளர் திருமதி திவ்யா தேஜா கசரனேனி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் திரு.சந்திரகாந்த், இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் திரு.குமார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.