Close

Employees Welfare Schemes

Publish Date : 18/12/2024
.

செ.வெ.எண்:-44/2024

நாள்:-17.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் 98,895 தொழிலாளர்களுக்கு ரூ.70.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக பயனடைந்த தொழிலாளர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார். குறிப்பாக தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்

தமிழ்நாடு அரசு, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் பொருட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மேலும், அமைப்புச்சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கென தனி வாரியம் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் இதர 16 நலவாரியங்கள் என மொத்தம் 18 நலவாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலவாரியம், தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு காலணி, தோல்பொருட்கள் தொழிலாளர்கள் நலவாரியம்(உற்பத்தி மற்றும் தோல்பதனிடும்), தமிழ்நாடு ஓவியர் நலவாரியம், தமிழ்நாடு பொற்கொல்லர் நலவாரியம், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் மொத்தம் 18 நலவாரியங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்தல், பதிவு புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் மீது உதவித்தொகை வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகள் தொழிலாளர் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை(15.12.2024) கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், உடலுழைப்பு மற்றும் இதர 16 நல வாரியங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் நல வாரியம் என்ற பிரிவுகளில் பதிவு செய்து, பதிவை புதுப்பித்து மொத்தம் 1,46,904 தொழிலாளர்கள் உள்ளனர். தொழிலாளர் நல வாரியங்கள் சார்பில் 07.05.2021 முதல் 15.12.2024-ஆம் தேதி வரை கல்வி உதவித்தொகை 43,630 நபர்களுக்கு ரூ.7.08 கோடி மதிப்பிலும், திருமண உதவித்தொகை 929 நபர்களுக்கு ரூ.1.29 கோடி மதிப்பிலும், கண்கண்ணாடி 12 நபர்களுக்கு ரூ.6,000 மதிப்பிலும், இயற்கை மரணம் நிவாரணத்தொகை 788 நபர்களுக்கு ரூ.2.73 கோடி மதிப்பிலும், விபத்து மரணம் நிவாரணத் தொகை 27 நபர்களுக்கு ரூ.30.70 இலட்சம் மதிப்பிலும், பணியிட விபத்து மரணம் நிவாரணத் தொகை 7 நபர்களுக்கு ரூ.35.00 இலட்சம் மதிப்பிலும், புதிய குடும்ப ஓய்வூதியம் திட்டம் 60 நபர்களுக்கு ரூ.63,000 மதிப்பிலும், மாதாந்திர ஓய்வூதியம் 14,077 நபர்களுக்கு ரூ.57.53 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 98,895 தொழிலாளர்களுக்கு ரூ.70.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் குஜிலியம்பாறை வட்டம், ஆர்.கொள்ளப்பட்டி அருகே தாளிப்பட்டியைச் சேர்ந்த திரு.பெ.சீனிவாசன் என்பவர் மகன் திரு.பாலாஜி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டம், ரெட்டியபட்டியைச் சேர்ந்த திரு.செந்தில்குமார் என்பவர் மகன் திரு.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்ததையடுத்து அவர்களது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் – பணியிடத்து விபத்து மரணம் உதவித்தொகையாக தலா ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலை மற்றும் திண்டுக்கல் நாகையகோட்டையைச் சேர்ந்த திருமதி சரஸ்வதி என்பவர் குடும்பத்திற்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் – ஈமச்சடங்கு மற்றும் விபத்து மரணம் உதவித்தொகையாக ரூ.2.05 இலட்சம் மற்றும் பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 16.12.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

உதவித்தொகை பெற்று பயனடைந்த திரு.பாலாஜி என்பவரது மகன் அரிகரன் தெரிவித்ததாவது:-
எனது தந்தை திரு.பாலாஜி 21.10.2022 அன்று கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதனால் நானும், எனது தாய் திருமதி பாக்கியலட்சுமி, தங்கை கிருஷ்ணவேணி, எனது பாட்டி திருமதி துளசியம்மாள் ஆகியோர் போதிய வருமானமின்றி, படிப்பு செலவிற்கு வழியின்றி மிகவும் சிரமத்திற்கு ஆளாகினோம்.

இந்நிலையில், தொழிலாளர் நல வாரியம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுவதை அறிந்து, திண்டுக்கல் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்திற்கு சென்று விசாரித்தோம். அப்போது, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பெயர் பதிவு பெறாத கட்டுமான தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுவதை அறிந்தோம். அதையடுத்து. அலுவலர்கள் கேட்ட ஆவணங்களை நாங்கள் முறையான விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தோம்.

எங்கள் மனு மீது அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, தற்போது எங்களுக்கு பணியிடத்து விபத்து மரணம் உதவித்தொகையாக ரூ.5.00 இலட்சம் கிடைத்துள்ளது. இந்த தொகை எங்கள் குடும்பத்திற்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. எங்கள் குடும்ப கஷ்டம் தீர வழிவகை ஏற்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்தார்.

உதவித்தொகை பெற்று பயனடைந்த ராதாகிருஷ்ணன் என்பவருடைய தாயார் திருமதி வீரம்மாள் தெரிவித்ததாவது:-

எனது கணவர் திரு.செந்தில்குமார் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்து உயிரிழந்தார். அதையடுத்து நானும் எனது 3 மகன்களும் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி மிகவும் சிரமப்பட்டு வந்தோம். அப்போது தொழிலாளர் நல வாரியம் மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டம் கிடையாது. வேறு வழியின்று நானும், எனது மகன்களும் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறோம்.

இந்நிலையில் எனது இரண்டாவது மகன் ராதாகிருஷ்ணன் 16.03.2023 அன்று கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று மண் சரிந்து விழுந்ததில் மண்ணில் புதைந்து உயிரிழந்தார். இது எங்கள் குடும்பத்திற்கு பேரிடியாக இருந்தது. அப்போதுதான், தொழிலாளர் நல வாரியம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுவதை சக தொழிலாளர்கள் மூலம் அறிந்து, திண்டுக்கல் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்திற்கு சென்று விசாரித்தோம். அப்போதுதான், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பெயர் பதிவு பெறாத கட்டுமான தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுவது எங்களுக்கு தெரியவந்தது. அதையடுத்து. அலுவலர்கள் கேட்ட ஆவணங்களை நாங்கள் முறையான விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தோம். எங்கள் மனு மீது அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, தற்போது எங்களுக்கு பணியிடத்து விபத்து மரணம் உதவித்தொகையாக ரூ.5.00 இலட்சம் கிடைத்துள்ளது. இந்த தொகை எங்கள் குடும்பத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது. எங்களைப்போன்ற ஏழை, எளிய மக்களின் துயர் தீர வழிவகை ஏற்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்வில் வளம்பெறச் செய்து வருகிறார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதே திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர்களின் எழுச்சிமிகு கருத்தாக உள்ளது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.