Close

Employees Welfare Schemes

Publish Date : 27/10/2025

செ.வெ.எண்:-64/2025

நாள்:-25.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் 1,01,473 தொழிலாளர்களுக்கு ரூ.122.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் வாயிலாக பயனடைந்த தொழிலாளர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார். குறிப்பாக, 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு மாதம் 1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கல்விபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, சொந்தமாக தொழில் தொடங்கி பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறும் வகையில், கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், மகளிர் திட்டம், தாட்கோ, மாவட்ட தொழில் மையம், கூட்டுறவு வங்கி உள்ளிட்ட துறைகள் வாயிலாக பல்வேறு விதமான தொழில் தொடங்க கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை உரிய வழியில் செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் பொருட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மேலும், அமைப்புச்சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கென தனி வாரியம் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் இதர 19 நலவாரியங்கள் என மொத்தம் 20 நலவாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலவாரியம், தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு காலணி, தோல்பொருட்கள் தொழிலாளர்கள் நலவாரியம் (உற்பத்தி மற்றும் தோல்பதனிடும்), தமிழ்நாடு ஓவியர் நலவாரியம், தமிழ்நாடு பொற்கொல்லர் நலவாரியம், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு கிக் தொழிலாளர்கள் நலவாரியம் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் மொத்தம் 20 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்தல், பதிவு புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் மீது உதவித்தொகை வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகள் தொழிலாளர் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை (30.09.2025) கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், உடலுழைப்பு மற்றும் இதர 18 நல வாரியங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் நல வாரியம் என்ற பிரிவுகளில் பதிவு செய்து, பதிவை புதுப்பித்து மொத்தம் 1,57,940 தொழிலாளர்கள் உள்ளனர். தொழிலாளர் நல வாரியங்கள் சார்பில் 07.05.2021 முதல் 30.09.2025-ஆம் தேதி வரை கல்வி உதவித்தொகை 69,113 நபர்களுக்கு ரூ.12.80 கோடி மதிப்பிலும், IIT/MBBS கல்வி உதவித்தொகை 4 நபர்களுக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலும், திருமண உதவித்தொகை 2857 நபர்களுக்கு ரூ.4.72 கோடி மதிப்பிலும், கண்கண்ணாடி 50 நபர்களுக்கு ரூ.33,200 மதிப்பிலும், இயற்கை மரணம் நிவாரணத்தொகை 1299 நபர்களுக்கு ரூ.5.01 கோடி மதிப்பிலும், விபத்து மரணம் நிவாரணத் தொகை 53 நபர்களுக்கு ரூ.74.65 இலட்சம் மதிப்பிலும், பணியிட விபத்து மரணம் நிவாரணத் தொகை 14 நபர்களுக்கு ரூ.70.00 இலட்சம் மதிப்பிலும், புதிய ஓய்வூதியம் திட்டம் 12,329 நபர்களுக்கு ரூ.1.40 கோடி மதிப்பிலும், புதிய குடும்ப ஓய்வூதியம் திட்டம் 39 நபர்களுக்கு ரூ.3.95 இலட்சம் மதிப்பிலும், மாதாந்திர ஓய்வூதியம் 15,714 நபர்களுக்கு ரூ.96.91 கோடி மதிப்பீட்டிலும், 1 பெண் ஆட்டோ ஓட்டுநர்க்கு புதிய ஆட்டோ வாங்க மானியம் ரூ.1.00 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 1,01,473 தொழிலாளர்களுக்கு ரூ.122.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கட்டுமான தொழிலாளார்களின் குழந்தைகளுக்கு IIT/IIM/MBBS உயர்கல்வி பயில்வதற்கான உதவித்தொகை ரூ.50,000/-ஐ அரசின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 24.03.2025 அன்று நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் வழங்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவு பெற்ற ஒரு பெண் ஆட்டோ ஒட்டுநர் சொந்தமாக புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 இலட்சம் அரசின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 21.07.2025 அன்று நடைப்பெற்ற மக்கள்குறைதீர்க்கும் நாள் முகாமில் வழங்கப்பட்டது

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் மருத்துவப் படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கான ஆணையை பெற்ற திண்டுக்கல் மாவட்டம், வெள்ளையம்பட்டியைச் சேர்ந்த திரு.இராமன் – திருமதி காளியம்மாள் தம்பதியரின் மகன் அபிமன்யூ தெரிவித்ததாவது:-

எனது தந்தையும், தாயும் கட்டடத் தொழிலாளிகள். அவர்கள் தினமும் கூலி வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப செலவையும் கவனித்துக்கொண்டு, என்னையும் படிக்க வைத்தனர். நான் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, நீட் தேர்வில் வெற்றி பெற்று தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்து தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது படிப்புச் செலவை சமாளிக்க எனது பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அப்போதுதான், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதை அறிந்தோம். மேலும், மருத்துக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை வழக்கப்படுவதை அறிந்தோம். எனது தாயார் 20 ஆண்டுகளாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக உள்ளார்.

இதையடுத்து முறையான ஆவணங்களுடன் திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். எனக்கு முதலாமாண்டுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்த தொகை எனது படிப்புக்கு பெரிதும் உதவியாக உள்ளது. என்னைப் போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயிலுவதை உறுதிப்படுத்திடும் வகையில் இதுபோன்ற கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்தார்.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் புதிய ஆட்டோ பெற்ற திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றியம். காமாட்சி நகரை சேர்ந்த திருமதி ச.மயூரி அவர்கள் தெரிவித்ததாவது:-

என் பெயர் மயூரி, நான் திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றியம், காமாட்சி நகரில் வசித்து வருகின்றேன். எனது கணவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். இந்நிலையில் தனியார் நிறுவனங்களில் கூலி வேலை செய்து வந்தேன். தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தின் சார்பில், புதிய ஆட்டோ வாங்கி தொழில் செய்யலாம் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அதன்படி, முறையான ஆவணங்களுடன் திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். எனக்கு தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில், எனக்கு புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 இலட்சம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 21.07.2025-அன்று நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் வழங்கினார். நான் பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் அழைத்து செல்வதன் மூலம் வரும் வருமானத்தினை வைத்து நல்ல முறையில் வாழ்ந்து வருகின்றேன். என்னைப்போன்ற ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என தெரிவித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்வில் வளம்பெறச் செய்து வருகிறார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதே திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர்களின் எழுச்சிமிகு கருத்தாக உள்ளது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.