Close

Employment – Private Job fair-MVM – Mega job mela

Publish Date : 09/12/2024
.

செ.வெ.எண்:-19/2024

நாள்:-07.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு பெற்ற 412 வேலைநாடுநர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் இன்று(07.12.2024) நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சுமார் 1,10,000 பதிவுதாரர்கள் வேலை வாய்ப்புக்காக தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதிகளை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கும் மாவட்டத்தின் பிற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பினை உறுதி செய்ய பல்வேறு சேவைகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, அரசுத் துறையில் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டு, டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ் மற்றும் தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் போன்ற மத்திய மற்றும் மாநில அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு பதிவுதாரர்களை தயார் செய்து, அவர்களை நிரந்தர அரசு வேலையில் பணியமர்த்த வேண்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் ஏற்படுத்தப்பட்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகளில், தேர்ந்த வல்லுநர்கள் மூலம் ஆண்டு முழுவதும் சிறந்த முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு வசதியாக பொது அறிவு நூல்களும், நாளிதழ்களும் அலுவலகத்தில் உள்ள நூலகத்தில் பராமரிக்கப்பட்டு தேர்வர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் டிஎன்பிஎஸ்சி குருப்-4, குருப்-2-2ஏ, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் போன்ற தேர்வுகளுக்கு திண்டுக்கல், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி பெற்ற 118 பேர் தேர்ச்சி பெற்று தற்போது, அரசுப் பணியில் உள்ளனர்.

மேலும் தனியார்துறையிலுள்ள வேலைவாய்ப்பினை எல்லா வகையான கல்வித்தகுதியுடைய வேலைநாடுநர்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஒவ்வொரு மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளிலும் சிறிய அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவை தவிர மாவட்ட அளவில் பெரிய அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் ஆண்டிற்கு இருமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன்(மகளிர் திட்டம்) இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 07.05.2021 முதல் 04.12.2024 வரை 7 பெரிய வேலைவாய்ப்பு முகாம்களும், 42 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் என மொத்தம் 49 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றின்படி, 7,271 வேலைநாடுநர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 2024-25 ஆம் நிதியாண்டில் மட்டும் 1,628 வேலைநாடுநர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

திண்டுக்கல் எம்.வி.எம்.அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் இன்று(07.12.2024) நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 168 வேலையளிக்கும் நிறுவனங்களும், 1890 வேலைநாடுநர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாம் மூலமாக 3 மாற்றுத்திறனாளிகள் உட்பட 412 பேர் பணி நியமனம் பெற்றனர்.

முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டு, பணி வாய்ப்பு பெற்ற வேலைநாடுநர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். பின்னர் பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.

மேலும், இம்முகாமில் மாவட்டத் தொழில் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மகளிர் திட்ட அலுவலகம் மற்றும் பல்வேறு திறன் பயிற்சி அளிப்பவர்கள் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் அரசு நலத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தமிழக அரசால் வழங்கப்படும் வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில், மண்டல இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு) திருமதி ஜோதிமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் திருமதி செ.பிரபாவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.அ.ராப்சன் டேவிட், எம்விஎம் அரசினர் மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் முனைவர் க.நாகநந்தினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.