Employment – TNPSC Coach
செ.வெ.எண்:-31/2024
நாள்:-28.05.2024
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 முதல்நிலைத் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்(TNSURB) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இத்தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 (TNPSC GROUP I) தேர்விற்கு 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 28.03.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி 1-ற்கான முதல்நிலைத் தேர்விற்கு (TNPSC Group I Prelims) இலவசப் பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு 03.05.2024 முதல் நடைபெற்று வருகிறது. அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.
இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.