Close

Exwel – Muthalvarin Kakkum Karangal Scheme

Publish Date : 24/02/2025

செ.வெ.எண்:-61/2025

நாள்:-21.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

முன்னாள் படைவீரர் நலனுக்காக “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தில் பயன்பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சுதந்திர தின உரையின்போது, முன்னாள் படைவீரர் நலனுக்காக “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், மீதமுள்ள கடன் தொகைக்கு 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும், முன்னாள் படைவீரர்கள் விதவையர்கள், இராணுவப் பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள்(வயது வரம்பு-55), முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள், மகன் மற்றும் முன்னாள் படைவீரர்களின் விதவையர்களின் திருமணமாகாத மகள்கள், மகன்கள் ஆகியோருக்கு வயது வரம்பு – 25 வரை உள்ளவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் மூலம் கடனுதவி பெற www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் 25.02.2025 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், இராணுவப் பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள் மற்றும் சார்ந்தோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.