Close

Farmer Welfare Service Center

Publish Date : 09/08/2025

செ.வெ.எண்:-37/2025

நாள்: 08.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

உழவர் நல சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4000 வேளாண் பட்டதாரிகளும், 600-க்கும் மேற்பட்ட வேளாண் பட்டய படிப்பு முடித்தவர்களும் பட்டம் பெறுகிறார்கள். விவசாயிகளின் நலன் மற்றும் விவசாய மேம்பாட்டிற்காக அவர்களின் நிபுணத்துவம் மற்றும் தொழில் நுட்ப அறிவை பயன்படுத்திட முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் நிறுவிட வேளாண்மை உவர்நலத்துறை உதவிபுரிந்திடும். இந்த மையங்கள் நிறுவுவதற்கு, ஒரு மையத்திற்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 இலட்சம் முதல் ரூ.6 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இந்த மையங்கள் விவசாய ஆதரவிற்கான மையங்களாக செயல்படும். விதைகள், உரங்கள் மற்றும் பிற விவசாய தேவைகள் போன்ற அத்தியாவசிய உள்ளீடுகளை வழங்குவதுடன் கூடுதலாக பயிர் உற்பத்தி திறனை மேம்படுத்துதல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, நவீனதொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புக் கூட்டல் நுட்பங்களை பின்பற்றுவதற்கான நிபுணத்துவ வழிகாட்டுதலை வழங்கும் மையமாக செயல்படும். இத்திட்டம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற பயனாளிகளுக்கான வயது வரம்பு 20 முதல் 45 வரை இருத்தல் வேண்டும், வேளாண்மை/ தோட்டக்கலை/ வேளாண்வணிகம்/ வேளாண் பொறியியல் பட்டபடிப்பு/பட்டய படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியில் இருத்தல் கூடாது, வங்கி மூலம் கடன்பெற்ற தொழில்புரிவோர் நிறுவனத்தின் உரிமையானது தனி உரிமையாக இருக்க வேண்டும், விண்ணப்பதாரர் கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற தகுதியுடையவர்.

இத்திட்டத்தில் பயன்பெற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்பு / பட்டயபடிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சரக்கு மற்றும் சேவை வரி எண் (GST NO), நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD), வகுப்பு சான்றிதழ் (Community Certificate), பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை ஆகியவை தேவையான ஆவணங்களாகும்.

உழவர் நல சேவை மையம் அமைக்க விரும்பும் நபர்கள் விதை விற்பனை உரிமம், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்வதற்கான உரிமங்கள் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தில் இணையும் பயனாளிகள் உரிமம் இல்லாமல் இருப்பின் தேவையான உரிமம் பெறுவதற்கு வேளாண்மை துறை உதவி புரிந்திடும். இத்திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் ரூ.10 இலட்சம் அல்லது ரூ.20 இலட்சத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிககள் அல்லது கூட்டுறவு வங்கியில் கடனுதவி பெற வேண்டும். மேலும், கடன் வழங்கிய உத்தரவு கடிதத்தினை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் இணைய விரும்பும் விண்ணப்பதாரர்கள் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க விரும்பும் மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து Agrisnet இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.