Close

Flag Day – Notification

Publish Date : 09/12/2024
.

செ.வெ.எண்:- 17/2024

நாள்:07.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

படைவீரர் கொடிநாள்-2024 நிதி வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நிதி வழங்கி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான தேநீர் உபசரிப்பு நிகழ்ச்சியில் 21 பயனாளிகளுக்கு ரூ.3.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(07.12.2024) படைவீரர் கொடிநாள்-2024 நிதி வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நிதி வழங்கி தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான தேநீர் உபசரிப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தனது ஒரே மகன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மகன்களை இராணுவப் பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு போர்ப்பணி ஊக்க மானியமாக ஒருவருக்கு ரூ.25,000 மற்றும் வெள்ளிப்பதக்கம், தொகுப்பு நிதியிலிருந்து 8 முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை மானியம் ரூ.2.05 இலட்சம், ஒரு முன்னாள் படைவீரரின் சிறாருக்கு சைனிக் பள்ளி ஊக்க மானியம் ரூ.25,000, இரண்டு முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கு திருமண மானியம் ரூ.50,000, ஒரு முன்னாள் படைவீரருக்கு தட்டச்சு மானியம் ரூ.8,000, இரண்டு முன்னாள் படைவீரர்களுக்கு கண்கண்ணாடி மானியம் ரூ.7,800, நான்கு முன்னாள் படைவீரர்களுக்கு வீட்டுவரி மானியம் ரூ.16,637, இரண்டு முன்னாள் படைவீரர்களின் மனைவிக்கு புற்றுநோய் நிவாரண நிதியுதவித்தொகை மானியம் ரூ.35,000, ஒரு முன்னாள் படைவீரருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவியாக ரூ.20,000 என ஆக மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.3.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் போர் மற்றும் போரை ஒத்த நடவடிக்கையில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினர், இரண்டாம் உலகப்போரில் வீரமரணம் அடைந்த படைவீரர்களின் மனைவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.

இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 100 வயது கடந்த முன்னாள் படைவீரர் திரு.கே.சுந்தரராஜன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கி, கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

டிசம்பர் 7 கொடிநாள் என்பது முப்படையில் பணியாற்றும் நம் இராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவுகூறும் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டிற்காக தமது இன்னுயிர் நீத்தும், உடல் ஊனமுற்றும், இளமைக் காலத்தை தேச நலனுக்காக அர்ப்பணித்தும், எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் பாதுகாத்தும் அளப்பரிய தியாகம் செய்யும் படைவீரர்களை கவுரவிக்கும் வகையிலும், வீரர்களின் குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டியதும் நமது கடமையாகும். நம் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்கள் மீது காட்டும் அன்பின் இலக்கணமாகவும், இது ஒரு பொன்னான வாய்ப்பாகவும் கருதி, பொதுமக்கள் கொடிநாள் நன்கொடைகளை அதிகளவில் வழங்கிட வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில், கொடிநாள் 2023 வசூல் தொகையாக ரூ.1,47,79,355, வசூல் செய்யப்பட்டுள்ளது. இக்கொடி நாள் நன்கொடை மூலமாக கடந்த ஒரு ஆண்டில் 560 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வாயிலாக ரூ.1,59,45,387 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. முப்படைகளில் பணியாற்றும் வீரர்களுக்கு அரசு அலுவலர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல மதிப்பு உள்ளது. ராணுவத்தில் பணியாற்றி வருவோருக்கும், ஓய்வு பெற்றோரின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்பட்டு வருகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (கூ.பொ) திருமதி ச.சுகுணா, முன்னாள் படைவீரர் நலன் அமைப்பாளர் திரு.தி.செல்வம், முப்படைவீரர் வாரிய உபதலைவர் லெப்.கர்னல்.கே.சங்கர்(ஓய்வு), அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.