Food Safety Dept
செ.வெ.எண்:- 105/2025
நாள்: 28.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்பு துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுபெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
“உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறி முறைகளை உணவு வணிகர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கி உணவு பாதுகாப்புத் தறையின் அலுவலர்கள் அமல்படுத்த வேண்டும். உணவு வணிகர்களும் அச்சட்டத்தின் நெறி முறைகளைப் பின்பற்றி நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாமல் மக்கும் தன்மையுள்ள பொட்டலமடும் பொருட்களை மட்டும் உணவு விநியோகிக்கவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தும் மிகச் சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு அதாவது வருடாந்திர விற்றுக் கொள்முதல் ரூ.12 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவு வணிகர்களுக்கு, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு துறையால் ரூ.1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம். அவ்விண்ணப்பங்களை நியமன அலுவலர் உள்ளடக்கிய குழுவினர் பரிசீலனை செயது, கூட்டாய்வுக் குழு சம்பந்தப்பட்ட உணவகத்தினை கள ஆய்வு செய்து தமது பரிந்துரையை உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு சமர்ப்பிக்கும். அதன்பின்னர் மாநில அளவிலான பரிசீலனைக் குழு பரிசீலித்து மாவட்டத்திற்கு தலா ஒரு பெரிய உணவகத்தையும் சிறு உணவகத்தையும் சிறந்த உணவகங்களாக தேர்ந்தெடுக்கும், சிறந்த உணவகங்களுக்கான விருதில் பங்கேற்க விண்ணப்பதாரர் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பிதிவுச் சான்றிதழ் பெற்று அது நடப்பில் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் உணவகத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர் உணவு பாதுகாப்பில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் உணவகத்தில் அனைத்து பணியாளர்களும் தொற்று தாக்கமற்றவர்கள் என்பதற்கான மருத்துவச் சான்று அவசியம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சுகாதாரத் தணிக்கை மேற்கொண்டு, சுகாதார மதிப்பீட்டு சான்று பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் உணவத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அதிக ஆபத்துள்ள உணவு வணிக வகைக்கான தணிக்கை மேற்கொணடு அறிக்கை வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தமது உணவத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் வழங்கப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியல் மூலம் தாமே தணிக்கை மேற்கொண்டு அதனை சமர்ப்பிக்க வேண்டும். எனவே, அனைத்து உணவு வணிகர்களும் தமிழநாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் மற்றும் உணவு பாதுகாப்பு துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் ஆகியவற்றை தவிர்த்து மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களை பயன்படுத்தி சுற்றுப்புற சூழலை மேம்படுத்த உதவுவதுடன், தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு துறையின் விருதையும் வெல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும், விபரங்களுக்கு எண்-10, தலைமை அஞ்சல் ரோடு, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அலுவலகத்தினை அணுகலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.