Close

Government College admission

Publish Date : 13/05/2025

செ.வெ.எண்:-44/2025

நாள்:-12.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து பயில மாணாக்கர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஏதுவாக TNGASA இணையதள விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு “புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன்“ ஆகிய திட்டங்கள் மூலமாக மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. “நான் முதல்வன் திட்டம்“ மூலம் வேலைவாய்ப்பிற்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் இலவசப் பேருந்து வசதிகளும் உள்ளன. திறமை வாய்ந்த ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 27.05.2025 வரை பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.48.00 மற்றும் பதிவுக் கட்டணம் : ரூ.2.00 ஆகும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2.00 மட்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை Debit Card/ Credit Card/ Net Banking/ UPI மூலம் இணையதளம் செலுத்தலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அதில் திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 910 இடங்கள், நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 858 இடங்கள், கொடைக்கானல் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 660 இடங்கள், வேடசந்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 290 இடங்கள், ஒட்டன்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 320 இடங்கள், ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 240 இடங்கள் மற்றும் நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 280 இடங்கள் என மொத்தம் 3,558 இடங்கள் உள்ளன.

மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தில் உள்ள அலுவலர்களை திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 044 24343106/24342911 என்ற தொலைபேசி எண்களில் வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.