Close

Heavy Rain Alert

Publish Date : 28/05/2024

செ.வெ.எண்:-21/2024

நாள்:-18.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை(19.05.2024) மற்றும் நாளை மறுநாள்(20.05.2024) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் காணொலிக்காட்சி வாயிலாக இன்று(18.05.2024) ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை(19.05.2024) மற்றும் நாளை மறுநாள்(20.05.2024) கனமழை அல்லது மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, மழை வெள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே பருவமழை காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை அறிவிப்புகள் தெரிவிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை 24X7 என்ற முறையில் செயல்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மழை பாதிப்பு மற்றும் மழை தொடர்பான உதவிகள் குறித்து கட்டுப்பாட்டு தொலைபேசி மற்றும் செல்லிடைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம்.

வ. எண் அலுவலகத்தின் பெயர் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்
1 மாவட்டஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல், 0451-1077, 0451-2400162, 2400163, 2400164, 2400167
2 திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் 0451-2427304
3 திண்டுக்கல் கிழக்கு, வட்டாட்சியர் அலுவலகம் 0451-2471305
4 நத்தம், வட்டாட்சியர் அலுவலகம் 04544-244452
5 நிலக்கோட்டை, வட்டாட்சியர் அலுவலகம் 9445000581, 04543-233631
6 ஆத்தூர், வட்டாட்சியர் அலுவலகம் 9384094523
7 பழனி, வட்டாட்சியர் அலுவலகம் 04545-242266
8 ஒட்டன்சத்திரம், வட்டாட்சியர் அலுவலகம் 04553-241100
9 வேடசந்தூர், வட்டாட்சியர் அலுவலகம் 04551-260224
10 குஜிலியம்பாறை, வட்டாட்சியர் அலுவலகம் 04551-290040
11 கொடைக்கானல், வட்டாட்சியர் அலுவலகம் 04542-240243
12 திண்டுக்கல் மாநகராட்சி 9944570076
13 நகராட்சி, பழனி 7397634377
14 நகராட்சி, ஒட்டன்சத்திரம் 9842370552
15 நகராட்சி, கொடைக்கானல் 04542-241253, 8489886639, 9786016606

கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

கனழை காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நிவாரண முகாம்கள் அமைப்பதற்காக கண்டறியப்பட்ட பள்ளிகள், விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் கட்டடத்தின் உறுதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நிவாரண மையங்களில் குடிநீர், மின்சாரம், ஜெனரேட்டர், டீசல், மளிகைப் பொருட்கள், படுக்கை விரிப்புகள், மெழுகுவர்த்திகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முகாம்களில் தங்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்கு தேவையான பொருட்களை வழங்க மொத்த வியாபாரிகளின் விபரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும்.

அனைத்து வட்டங்களிலும் உள்ள முதல் தகவல் அளிப்பவர்களின் இருப்பு நிலை, செல்போன் எண், அவர்களின் பயன்பாடு போன்றவற்றை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் படகு போன்ற மீட்பு பணிக்கான சாதனங்கள் மற்றும் வீரர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் நீச்சல் தெரிந்தவர்கள், பாம்பு பிடிப்பவர்கள், மழை வெள்ளத்தில் சாலைகளில் சாய்ந்து விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற மரம் வெட்டுபவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்படும் மின்கம்பங்கள், வயர்களை உடனடியாக அகற்றி மின்சாரம் தடையின்றி வழங்க, மின்கம்பங்கள், மின்மாற்றிகள், வயர்கள் மற்றும் தேவையான பணியார்களுடன் மின்வாரிய அலுவலர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் கழிவுநீர் செல்வதற்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிருமி நாசினி மூட்டைகளை தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும், நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து, நீர் நிரப்பி குளோரின் கலந்து விநியோகிக்க வேண்டும்.

வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குளம், வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டால், சாலைகள் மற்றும் பாலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சீரமைக்க ஜேசிபி வாகனத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஆவின் பால் போன்ற அத்தியாவசிப் பொருட்கள் தடையின்றி விநியோகிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து, தேவையான பணியாளர்கள் மற்றும் கூடுதல் வாகனங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக மலைப் பகுதிகளுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்குத் தேவையான பொருட்கள் போதிய அளவு இருப்பு இருப்பதையும், அந்த பொருட்கள் மழையில் நனைந்துவிடாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும். அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் போதுமான அளவு மருந்து பொருட்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும். கர்ப்பிணிகள், நோயாளிகளை உடனடியாக மீட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆடு, மாடு மற்றும் இதர கால்நடைகளை மழைநீர் சூழாத உயரமான பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும். கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும். மழைவெள்ளத்தில் சிக்கி கால்நடைகள் இறந்தால், அதுகுறித்த தகவல்களை கால்நடைத்துறையினர் உடனடியாக தெரிவிக்க வேண்டும். மழைவெள்ளத்தால் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர் சேதம் ஏற்பட்டால் அந்த பாதிப்புகள் குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் சேத மதிப்பீடு தயார் செய்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

அணைகள், ஆறு, ஏரி, குளம் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் வரும் வெள்ள நீரை வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ குழந்தைகளை அனுமதிக்க கூடாது என்பது குறித்து பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்

அதிக மழைப்பொழிவு ஏற்பட்டாலும். வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.