Close

HMP-Education Loan Mela-PSNA college

Publish Date : 04/09/2024
.

செ.வெ.எண்:-86/2024

நாள்:30.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட அளவிலான மாபெரும் கல்வி கடன் திருவிழாவில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் கலந்துகொண்டு, 163 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.34 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் இன்று(30.08.2024) திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாபெரும் கல்வி கடன் திருவிழாவில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் கலந்துகொண்டு, 163 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.34 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.

மருத்துவம், பொறியியல் மற்றும் இதர தொழில் படிப்புகளுக்கு முறையே தேசிய தகுதித்திறன் மற்றும் நுழைவுத்தேர்வு பொறியியல் கலந்தாய்வு, இதர நுழைவுத்தேர்வு மற்றும் நேரடியாக கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வங்கிகள் வாயிலாக கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தக் கல்விக்கடனுதவி பெற மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4,50,000-க்குள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் வாங்கிய கல்விக்கடனில் அதிகபட்சமாக ரூ.10,00,000 வரையிலான கடன் கணக்கில் கொள்ளப்பட்டு அதற்குரிய வட்டி படிக்கும் காலங்களுக்கு முழுமையாக மானியமாக வழங்கப்படுகிறது.

அதன்படி, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற கல்விக் கடன் திருவிழாவில், பல்வேறு வங்கிகள் சார்பில் 163 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.34 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டது. 2024-25-ஆம் நிதியாண்டில் மொத்தம் 398 மாணவர்களுக்கு ரூ.12.42 கோடி மதிப்பிலான கல்விக் கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்னும் தொடர்ந்து கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கல்விக்கடன் பெற விரும்புவோர் வித்யாலஷ்மி போர்டல் மூலம் விண்ணப்பித்து, பயன்பெறலாம்.

மருத்துவம், பொறியியல், இதர தொழில் படிப்புகள், கலை, அறிவியல் மற்றும் பிற படிப்புகளுக்கு வங்கியில் கல்விக்கடன் பெறுவதற்கு www.vidyalakshmi.co.in என்ற இணையதளம் வாயிலாக மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது, ஆதார் அட்டை, கல்வி தகுதி 10 மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ், ஒற்றைச்சாளர முறை வழிச்சான்று (Counselling Letter), மாற்று சான்றிதழ்(Transfer Certificate), கல்லுாரி சேர்க்கை கடிதம், கட்டண விபரம், கல்லூரியின் (Approval/Affiliation) சான்று, பான் அட்டை, சாதி சான்றிதழ், பெற்றோர் ஆண்டு வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று மற்றும் உறுதிமொழி சான்று, கடன் பெறும் வங்கியின் பெயர் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகிய விபரங்களை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், முன்னோடி வங்கி மேலாளர் திரு.அருணாச்சலம் மற்றும் வங்கியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.