Close

Horticulture-North east monsoon

Publish Date : 24/10/2024

செ.வெ.எண்:-56/2024

நாள்:-22.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

வடகிழக்கு பருவ மழையின்போது, தோட்டக்கலைப் பயிர்களில் சேதம் ஏற்படாமல் இருக்க தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டு பயிர்களை பாதுகாத்துக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

எதிர் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களில் சேதம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மரங்களின் எடையைக் குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்திட வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணைக் குவித்து வைத்தல் வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்காதவாறு தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை மற்றும் காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்ப்பகுதியைச் சுற்றிலும் மண் அணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களுக்கு தேவையான தொழு உரம் இட வேண்டும்.

காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைத்து வயல்களிலும் அதிக அளவில் நீர் தேங்காதவாறு வடிகால் வசதி செய்ய வேண்டும். மேட்டுப்பாத்தி உடன் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயிர் சாகுபடி முறை பயன்படுத்தினால் பயிர் சேதத்தை குறைக்கலாம்.

ஈரப்பதத்தால் ஏற்படும் பூஞ்சான் தாக்குதலை கட்டுப்படுத்த டிரைகோடெர்மாவிரிடி மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லி மருந்துகளை வேர்ப்பகுதியில் இட்டு நோய் வராமல் தடுக்க வேண்டும். அதிக மழை பொழிவு உள்ள நாள்களில் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.

பசுமைக்குடில் மற்றும் நிழல் வலைக்கூடம் ஆகியவற்றை நிலத்துடன் இணைத்துக் கம்பிகளால் வலுவாக கட்டுவதன் மூலம் காற்றினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க முடியும்.

வருடாந்திரப் பயிரான வாழையில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மரத்தின் அடியில் மண் அணைத்தல் மற்றும் சவுக்கு அல்லது யூகலிப்படஸ், மூங்கில் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். மேலும், தங்கள் வயலில் வடிகால் வசதி அமைக்க வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும்.

நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். வயல்களில் தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மழை வெள்ளத்தின்போது தங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகள், ஓடைகளை கடக்க வேண்டாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.