Kalai Thiruvizha-2024
செ.வெ.எண்:-41/2024
நாள்:-19.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் 45 வகையான போட்டிகளில் 2,789 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
“மனசுக்கு உற்சாகமூட்டும் கலைத்திருவிழா“ மாணவ, மாணவிகள் நெகிழ்ச்சி…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் இலட்சக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலும், அவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையிலும், பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழாக்கள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள், மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வர். அதில் வெற்றிபெறுபவர்களுக்கு கலையரசன் மற்றும் கலையரசி விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநில அளவில் சிறப்பாக கலைத்திறனை வெளிப்படுத்திய அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் வெளிநாட்டுச் சுற்றுலாவிற்கு தேர்வு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவர்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் (2024-25-ஆம் ஆண்டு) பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது, மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள், “6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இக்கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படும்” என அறிவித்தார்கள்.
அதன்படி, இந்த ஆண்டு (நடப்பு 2024-2025 கல்வி ஆண்டில்) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி என இரண்டு பிரிவுகளிலும் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத்திருவிழாவில் நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை பட்டிமன்றம் உட்பட 45 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி அளவில் 57,705 மாணவர்களும், வட்டார அளவில் 14,127 மாணவர்களும் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வட்டார அளவிலான போட்டிகளில் முதல் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் 18.11.2024 முதல் 2 நாட்கள் திண்டுக்கல் புனித லுார்து அன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன. இதில் 1,034 அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள், 1,755 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் என மொத்தம் 2,789 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் 2022-23-ஆம் கல்வி ஆண்டில் 18 மாணவர்கள் மாநில அளவில் பரிசுகளை வென்றனர். இதில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், செங்கட்டாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி கே.சிவஹரிதா வெளிநாட்டுச் சுற்றுலா செல்வதற்கு தேர்வாகி சிங்கப்பூருக்குச் சென்று வந்தார்.
2023-24-ஆம் கல்வி ஆண்டில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 5,635 மாணவர்கள் பங்குபெற்றனர். இவர்களில் 384 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 25 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
இக்கலைத் திருவிழா போட்டிகளில் நடப்பு (2024-2025) கல்வி ஆண்டில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வர்.
நடனம், இசை, ஓவியம், நாட்டுப்புறக் கலைகள், நவீன கலை வடிவங்கள் எனப் பலவற்றிலும் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்திட வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவ, மாணவிகளின் கலைத்திறனை ஊக்கப்படுத்துவதன் வழியாக அவர்களுக்கு கல்வியின் மீதான ஈடுபாட்டையும் வளர்த்தெடுக்க முடியும். மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையேயான உறவு மேம்படுகிறது. ஆசிரிய – மாணவ உறவு நன்றாக இருந்தால்தான் கல்வி வளப்படும். ஆகவே, கலைகளைக் கொண்டு இந்த உறவை வலுப்படுத்துவதும், ஒவ்வொரு மாணவரின் தனித்திறனை வெளிக்கொண்டு வருவதும்தான் கலைத்திருவிழாவின் நோக்கம், என தெரிவித்தார்.
கலைத்திருவிழாவில் கலந்துகொண்ட திண்டுக்கல் பள்ளி மாணவன் சே.மனோஜ் தெரிவித்ததாவது:-
எனக்கு கலைகளில் அதிக ஆர்வம் உண்டு. ஏதாவது ஒரு வழியில் எனது கலைத்திறனில் சாதிக்க வேண்டும் என்ற எனது தேடலை பூர்த்தி செய்த இடமாக இந்த கலைத்திருவிழா உள்ளது. இது எனக்கு உதவியாக உள்ளது. வட்டம், மாவட்டம், மாநில அளவில் வெற்றி பெற வேண்டும் என்று எனக்குள் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் தேடிப்போகும்போது அவருக்கு கிடைக்கிற வெற்றிதான் ஊக்கமாக இருக்கும். அந்தவகையில் அரசு நடத்தும் இந்த கலைத்திருவிழா மூலம் எனக்கு கிடைத்துள்ள வெற்றி இன்னும் பல போட்டிகளில் கலந்துகொள்ள என்னை ஊக்கப்படுத்தும்படியாக உள்ளது. இதற்காக முதலில் தமிழ்நாடு அரசுக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த கலைகள் என்பது இரத்தத்தில் கலந்தது. அந்த கலைகளை வெளிக்கொண்டுவர தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது. தமிழ்நாட்டில் பிறந்ததை நான் பெருமையாக கருதுகிறேன், என தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயஹரிப்பிரியா தெரிவித்ததாவது:-
எங்கள் பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் நாட்டுப்புற நடனம் என்ற பிரிவில் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினோம். பின்னர் வட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்றுள்ளோம். இங்கு நிறைய மாணவ, மாணவிகள் தங்களது தனித்திறமைகளை வெளிக்காட்டினர். இந்த விழா மனசுக்கு உற்சாகமூட்டும் அளவில் இருந்தது. இதுபோன்ற கலைத்திருவிழாவை ஏற்படுத்திக்கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி மரியரபேகா தெரிவித்ததாவது:-
எங்கள் பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் இலக்கிய நடனம் என்ற பிரிவில் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினோம். பின்னர் வட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்றுள்ளோம்.
கலைத்திருவிழா செயல்பாடுகள், மாணவ, மாணவிகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. கல்வியை தாண்டியும் கலை, விளையாட்டு என பிற துறைகளில் திறன் படைத்த மாணவர்கள் அதற்கான வாய்ப்புகள் அற்ற நிலையில் இருப்பர். அவர்களின் தனித்திறன்கள் கண்டறியப்பட்டால் அவற்றில் அவர்களை வளர்த்தெடுக்க முடியும். மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பாக இந்த கலைத்திருவிழா அமைந்துள்ளது. இந்த கலைத்திருவிழா மூலம் மாணவ, மாணவிகள் தங்களுக்குள்ளே உள்ள கலைத்திறமைகளை உணர்ந்துகொள்ள முடிகிறது” என தெரிவித்தார்.
இந்த போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற கலைத்திருவிழாக்களை நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் நன்றிகளை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.