Close

Kalaignarin Kanavu Illam – meeting

Publish Date : 13/07/2024
.

செ.வெ.எண்:-20/2024

நாள்:-08.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

“கலைஞரின் கனவு இல்லம்“ திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(08.07.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதாவது, ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைத்து குடிசை வீடுகளையும், கான்கிரீட் வீடுகளாக மாற்றும் நோக்கத்துடன் குடிசைகளில் வசிக்கும் குடும்பங்களை மதிப்பீடு செய்வதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கணக்கெடுப்பின்படி, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 1023 குடிசைகள், புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் 1126 குடிசைகள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 1946 குடிசைகள் என மொத்தம் 4095 குடிசைகள் கண்டறியப்பட்டு, அந்த குடிசைகள் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 5000-க்கும் குறைவான குடிசைகள் உள்ள மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் உள்ளதால், அனைத்து குடிசைகளையும் 2024-2025-ஆம் ஆண்டிலேயே “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தில் எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியான குடும்பங்களில் பட்டா இல்லாத பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா வழங்கி, அந்தப்பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்து, “குடிசை இல்லாத மாவட்டம்“ ஆக மாற்ற வேண்டும். அதோடு விடுபட்ட குடிசைகள் ஏதும் கண்டறியப்பட்டிருப்பின் இக்கணக்கெடுப்பில் சேர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த நிதியாண்டிற்குள் வீடுகள் கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சொந்த இடம் உள்ள பயனாளிகளுக்கு முன்னிரிமை அடிப்படையில் வீடு கட்ட ஆணை வழங்கப்படும். பயனாளிகளின் சட்டபூர்வ வாரிசாக வாழும் குடும்பங்களும் அனுமதிக்கப்படலாம். ஒரு கிராமத்திலோ அல்லது குடியிருப்புகளிலோ குழுக்களாக பட்டா வழங்கப்பட்ட இடங்களில் தகுதியான நபர்களுக்கு செறிவூட்டல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யலாம். சொந்த நிலம் இல்லாத பயனாளிகளுக்கு, ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். வீடு கட்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, கணக்கெடுப்பில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் தகுதியினை கள ஆய்வு செய்து, இந்த நிதியாண்டிற்கான தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திட வேண்டும். வீடுகட்ட குறைந்தபட்ச பரப்பளவு சமையலறை உட்பட 360 சதுர அடியாக இருக்க வேண்டும். அதில் 300 சதுர அடி ஆர்சிசி கூரை, மீதமுள்ள 60 சதுர அடி பயனாளியின் விருப்பப்படி எரியாத பொருள்கொண்ட மற்ற வகை கூரையாக அமைக்கலாம். ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்படும்.

மேலும், ஒரு பயனாளி வீடு கட்டுவது என்பது அவரது எதிர்காலத்திற்காக வாழ்நாணில் ஒருமுறை மேற்கொள்ளும் பணியாகும். இப்பயனாளிக்கு தகுதியிருப்பின் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 அல்லது கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கலாம். கலைஞர் கனவு இல்ல பயனாளிகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.1.00 இலட்சம் வரை கடனுதவி மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.