Close

Kalaingar Mahalir Urimai Thogai Thittam

Publish Date : 28/05/2024

பத்திரிகைச் செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்“ மூலம் 4,00,433 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்கள் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தினருக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.50,000 வைப்பு நிதியாக வழங்கப்படுகிறது. பெண்கள் தங்கள் சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் பொருட்டும், அன்றாட பயணச் செலவுகளை தவிர்த்திடும் வகையில் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம், பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான குழந்தை பேறு ஏற்படுத்திட கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மேலும் மகப்பேறு நிதியுதவித் திட்டம், பெண்கள் உயர்கல்வி கற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூ.1,000 என மகளிர் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பிரதிபலன் எதிர்பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாகவும், வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ்வதற்கு பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்“ தமிழக அரசு சார்பில் 15.09.2023 அன்று தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் நாளது தேதி வரையில் 1.15 கோடி குடும்பத்தலைவிகள் பயனடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக, ஆத்துார் வட்டத்தில் 28,319 மகளிரும், திண்டுக்கல்(கிழக்கு) வட்டத்தில் 62,429 மகளிரும், திண்டுக்கல்(மேற்கு) வட்டத்தில் 51,676 மகளிரும், குஜிலியம்பாறை வட்டத்தில் 21,301 மகளிரும், கொடைக்கானல் வட்டத்தில் 20,176 மகளிரும், நத்தம் வட்டத்தில் 32,968 மகளிரும், நிலக்கோட்டை வட்டத்தில் 54,872 மகளிரும், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 34,303 மகளிரும், பழனி வட்டத்தில் 53,772 மகளிரும், வேடசந்துார் வட்டத்தில் 40,617 மகளிரும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,00,433 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினால் பெண்கள் தங்களுக்கான சின்னசின்ன தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொண்டு, சிரமமின்றி வாழ வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது.