Close

Kalangar Kanavu Illam Scheme – Collector inspection

Publish Date : 02/07/2024
.

செ.வெ.எண்:-61/2024

நாள்:-27.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

“கலைஞரின் கனவு இல்லம்“ திட்ட பயனாளிகள் தேர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் பயனாளிகள் தேர்வு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், கணவாய்பட்டி ஊராட்சி, சக்கிலியன்கொடை கிராமத்தில் இன்று(27.06.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதாவது, ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

அதன்படி, குடிசையில் வசிப்பவர்கள், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் என ஏழை, எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊரக வளர்ச்சி முகமை மூலமாக பாதுகாப்பான வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில், அறை, சமையலறை, கழிப்பறை வசதிகளுடன் ரூ.3.50 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக, ஊராட்சி மன்ற தலைவர், உதவிப் பொறியாளர், பணி மேற்பார்வையாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரை கொண்ட பயனாளர் தேர்வு குழு அமைக்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். பயனாளிகள் தேர்வு கிராம சபைக் கூட்டங்கள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி சுமதி, ஊராட்சி மன்ற தலைவர் திருமதி நிஷா, உதவிப்பொறியாளர் திரு.தேக்குராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.