Kodaikanal E-Pass-Kodaikanal Green tax
செ.வெ.எண்:-11/2024
நாள்:-09.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ.பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை மற்றும் பசுமை வரி விதிக்கும் நடைமுறை தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.அ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ.பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை மற்றும் ஐந்து லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட அனைத்து வகையான நெகிழி பாட்டில்கள் பயன்படுத்தும் தனிநபர், வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.20/-(ஒரு பாட்டிலுக்கு) பசுமை வரி விதிக்கும் நடைமுறையினை முழுவீச்சில் செயல்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.அ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.அ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
இதில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களின்படி, கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு இ-பாஸ் எடுத்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். என்ற நடைமுறை 07.05.2024 தேதியிலிருந்து செயல்பாட்டில் உள்ளது. இந்த இ-பாஸ் முறையினை மேலும் எளிமைப்படுத்திட கொடைக்கானல் நுழைவு வாயிலில் உள்ள தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி பேரூராட்சி, கட்டகாமன்பட்டி, பழனித் தாலுகா பாலசமுத்திரம் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள காவல் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் தருமத்துப்பட்டி ஊராட்சி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் வடகாடு ஊராட்சிப் பகுதிகளில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் காவல் துறை, வனத்துறை, கொடைக்கானல் நகராட்சி, ஊராட்சித் துறை ஒருங்கிணைப்புடன் இ-பாஸ் ஸ்கேனிங் செய்து சரிபார்த்தல் பணிகள் நடைபெறும். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் சரிபார்த்தல் நடைமுறைக்காக காத்திருக்கவோ, வாகன நெரிசலில் கஷ்டப்படவோ தேவைப்படாது.
மேலும், கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட நெகிழி மற்றும் குளிர்பான பாட்டில்கள் உபயோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட நெகிழி தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்தினாலோ, வைத்திருந்தாலோ விற்பனை செய்தாலோ ஒரு நெகிழி பாட்டிலுக்கு ரூ.20/- பசுமை வரியாக விதிக்கப்பட்டு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கொடைகானலின் பசுமையை பாதுகாக்கவும் , அபராதம் செலுத்துவதை தவிர்க்கவும் 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட நெகிழி தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்தவோ, விற்பனை செய்திடவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எளிதாக இ-பாஸ் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக கொடைக்கானலுக்கு செல்லும் பகுதிகளில் உள்ள முக்கிய உணவகங்கள், விடுதிகள், பெட்ரோல் பங்க், கடைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் இ-பாஸ் QR Code, இ-பாஸ் இணைய முகவரி மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள்/ படங்கள் கூடுதலாக அச்சிடப்பட்டு பதாகைகள் நிறுவப்படும். இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இ-பாஸ் நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல், நெகிழி இல்லா பசுமை கொடைக்கானல் உருவாக்குவதற்கு வருவாய்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கொடைக்கானல் நகராட்சி, பண்ணைக்காடு பேரூராட்சி, வனத்துறை, காவல்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை, உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.