Close

Mass Anti Drug Pledge Campaign

Publish Date : 09/08/2025

செ.வெ.எண்:-40/2025

நாள்: 08.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி பிரச்சாரம் 11.08.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

”போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மாநில அரசானது 11.08.2025 திங்கள்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாநிலம் தழுவிய பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி (Mass Anti Drug Pledge Campaign) பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நாளில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் ”பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல்” நிகழ்வினை காணொளிக் காட்சி (Video Conferencing) மூலம் மாநிலம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. இந்நிகழ்வினை,

1. அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மாணவ / மாணவியர்கள், அனைத்து கல்லூரி மாணவ / மாணவியர்கள்

2. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்

3. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் (பஞ்சாயத்து / நகராட்சி / மாநகராட்சி)

4. சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் / இளைஞர் சங்கம் / குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள்

5. பொதுமக்கள் / சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள்

என அனைத்துத் துறையினரைக் கொண்டு ஒருங்கிணைத்து நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 11.08.2025 திங்கள் கிழமை அன்று திண்டுக்கல் மேற்கு வட்டம், சில்வார்பட்டிகிராமத்தில் உள்ள ”பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில்” மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி (Mass Anti Drug Pledge Campaign) எடுத்தல் மேற்கொள்ளப்படவுள்ளது. அதே சமயத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளி/மேல்நிலைப்பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளிலும் பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட உள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ. சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.