Close

Mass Contact

Publish Date : 13/07/2024
.

செ.வெ.எண்:-24/2024

நாள்:-10.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், தாண்டிக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 157 பயனாளிகளுக்கு ரூ.9.69 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், தாண்டிக்குடி கிராமத்தில் இன்று(10.07.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 157 பயனாளிகளுக்கு ரூ.9.69 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.

முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சிரமமின்றி தீர்வு காண வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பளியர் இன மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று கணக்கெடுக்கும் பணிகள் மற்றும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், சாதிசான்றிதழ், வருமான சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, நலவாரிய அட்டை, வீட்டுமனை பட்டா ஆகியவை வழங்கப்பட்டது. மேலும், வீடு இல்லாதவர்களுக்கு கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தங்கள் பகுதிகளில் கழிவு நீர், குப்பைகள், கொசு உற்பத்தியாகத வகையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்ள வேண்டும். ஊராட்சியின் மூலம் கூட்டு தூய்மை பணிகள் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தங்கள் குடும்பத்தினருக்கு காய்ச்சல் வந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். தாங்களே சுயசிகிச்சை மேற்கொள்ள கூடாது. இப்பகுதியின் குடிநீர் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், நிரந்தர தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இத்திட்டம் இந்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவிலான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இம்முகாமில், 14 பயனாளிகளுக்கு பழங்குடியினர் சாதிச்சான்று, 4 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல், 4 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல்(முழுப்புலம்), 31 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா நகல், 27 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை, 2 பயனாளிகளுக்கு பிறப்புச் சான்றிதழ், 33 பயனாளிகளுக்கு நல வாரிய அட்டை, 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் ரூ.19,500 மதிப்பீட்டிலும், 6 பயனாளிகளுக்கு இயற்கை மரண நிவாரணம் ரூ.1.32 இலட்சம் மதிப்பீட்டிலும், 1 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.10,000 மதிப்பீட்டிலும், 1 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.2,500 மதிப்பீட்டிலும், 10 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை நகல், 3 பயனாளிகளுக்கு தோட்டக்கலை இயக்க திட்ட மானியம் ரூ.35,000 மதிப்பீட்டிலும், 5 பயனாளிகளுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டக்கடன் ரூ.2.70 இலட்சம் மதிப்பீட்டிலும், 13 பயனாளிகளுக்கு மக்கள் மேம்பாட்டுத்திட்ட கடன் உதவி ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 157 பயனாளிகளுக்கு ரூ.9.69 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களை அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இம்முகாமில், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.ராஜா, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பி.சிவராம், இணை இயக்குநர் சுகாதாரத்துறை (பழனி) மரு.அனிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி சு.ஜெயசித்ரகலா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.பி.சத்தியநாரயணன், மாவட்ட செயல் அலுவலர்(வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) திருமதி பி.சுதாதேவி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.அ.கார்த்திகேயன், தாண்டிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் திரு.மகேஷ் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.