Mass contact- Ethilodu -Nilakottai Taluk

செ.வெ.எண்:-35/2025
நாள்:-12.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
எத்திலோடு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 532 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், எத்திலோடு ஊராட்சியில் இன்று(12.03.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 532 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.
முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மக்களுடன் முதல்வர், முதல்வரின் முகவரி, உங்களைத் தேடி உங்கள் ஊரில் போன்ற சிறப்பு திட்டங்களை வழிநடத்தி வருகிறார்கள்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு வருவாய் வட்டத்தில் தங்கி பொதுமக்களை சந்தித்து, அவர்களின் தேவைகள் குறித்து மனுக்கள் பெற்று, அந்த மனுக்கள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு மாதம் ஏதாவது ஒரு கிராமத்திற்கு அனைத்து துறை அலுவலர்களும் நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் தொடர்பு முகாம் இங்கு இன்றைய தினம் நடத்தப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சிரமமின்றி தீர்வு காண வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. குடிநீர், சாலை வசதி, பட்டா என பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகமும், அனைத்துத் துறை அலுவலர்களும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த முகாமில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அரங்குகளை பார்வையிட்டு, அரசின் திட்டங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். அரசின் திட்டங்கள் பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
இன்றைய முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா 26 பயனாளிகளுக்கு, சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் 44 பயனாளிகளுக்கு ரூ.6.35 இலட்சம் மதிப்பீட்டிலும், வட்டார வளர்ச்சித்துறை சார்பில் 130 பயனாளிகளுக்கு ரூ.1.85 கோடி மதிப்பீட்டிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கும், கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1.19 இலட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.33,500 மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறை சார்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.13.48 இலட்சம் மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சுகாதரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கும், சமூக நலத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.40,600 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.11.50 இலட்சம் மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.4.07 இலட்சம் மதிப்பீட்டிலும், உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 140 பயனாளிகளுக்கும், என மொத்தம் 532 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இம்முகாமில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.அ.பாண்டியன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, தாட்கோ மேலாளர் திருமதி கோ.முத்துச்செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பூ.சு.கமலக்கண்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி காயத்ரி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.செல்வம், நிலக்கோட்டை வட்டாட்சியர் திருமதி த.விஜயலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.