Close

Mass contact – Kothapulli

Publish Date : 12/12/2024
.

செ.வெ.எண்:-29/2024

நாள்:-11.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

கொத்தப்புள்ளி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாமில் 104 பயனாளிகளுக்கு ரூ.69.72 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் இன்று(11.12.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 104 பயனாளிகளுக்கு ரூ.69.72 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.

முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சிரமமின்றி தீர்வு காண வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

மக்கள் தொடர்பு முகாமை பொறுத்தவரை, முகாம் நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, அந்த மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மக்கள் தொடர்பு முகாமில் அதற்கான தீர்வுகள் வழங்கப்படும். மேலும், மனுக்களுடன் ஏதேனும் ஆவணங்கள் இணைக்கப்படாமல் இருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரியப்படுத்தி, அந்த ஆவணங்களை பெற்று, இணைத்து அந்த மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும். இதுதான் மக்கள்தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும். மக்கள் தொடர்பு முகாம் பயன்பெற வேண்டிய நாள். மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் நாள்.

அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்கள் இங்கு தெளிவாக எடுத்துரைத்தனர். மேலும் அரசின் திட்டங்கள் தொடர்பாக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு, அதில் ஏதேனும் திட்டங்கள் தங்களுக்கு பயன்படுமாயின் அந்த திட்டங்கள் குறித்த தகவலை அறிந்து, விண்ணப்பித்து பயன்பெறலாம்.

அந்த வகையில் இந்த முகாமை முன்னிட்டு பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான 104 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டு, இன்றையதினம் மனுதாரர்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், உங்களைத்தேடி உங்கள் ஊரில், மக்களுடன் முதல்வர் போன்ற திட்டங்களின் கீழ் நடைபெறும் முகாம்களிலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம்.

தமிழ்நாட்டை குடிசையில்லா மாநிலமாக மாற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 6000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான வீடுகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவுபெற்று பயன்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளன. அதேபோல் தொகுப்பு வீடுகளை பராமரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும், யாராவது ஒருவர் அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தில் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசின் திட்டங்களை அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இன்றைய முகாமில், வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா(முழுப்புலம் பட்டா மாறுதல், நத்தம் முழுப்புலம் பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல்) 20 நபர்களுக்கும், புதிய குடும்ப அட்டை 60 பயனாளிகளுக்கும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க 3 பயனாளிகளுக்கு ரூ.22,000 மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்பில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க 4 பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் காப்பீடு அட்டை, மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் டாம்கோ கடன் திட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ.69.72 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.ராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாசம், கொத்தப்புள்ளி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஜி.சுந்தரி அன்பரசு, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.