Close

Mass contact-Paachalur

Publish Date : 15/05/2025
.

செ.வெ.எண்:-48/2025

நாள்:-14.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

பாச்சலுார் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 110 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பாச்சலூர் கிராமம் சமுதாய கூடத்தில் இன்று(14.05.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 110 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார். அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அரசின் நலத்திட்ட உதவிகள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். மக்களைத் தேடிச் சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதற்காகவும், பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவற்றை தீர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மக்களுடன் முதல்வர், முதல்வரின் முகவரி, உங்களைத் தேடி உங்கள் ஊரில் போன்ற சிறப்பு திட்டங்களை வழிநடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு மாதம் ஒரு கிராமத்திற்கு அனைத்து துறை அலுவலர்களும் நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு, மனுக்கள் பெற்று ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சிரமமின்றி தீர்வு காண வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மக்கள் தொடர்பு முகாம் இங்கு இன்றைய தினம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

குடும்ப பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் சுமார் 6,200 வீடுகள் கட்டவும், ஊரக குடியிருப்புகள் சீரமைப்புத் திட்டத்தில் சுமார் 8,000 வீடுகள் சீரமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 3,000 வீடுகள் கட்டப்படவுள்ளது. அதேபோல் பட்டா இல்லாத நபர்களுக்கு பட்டா வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பள்ளிப்படிப்பை முடித்த அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக உயர்வுக்கு படி, கல்லுாரிக் கனவு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடிநீர், சாலை வசதி, பட்டா என பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகமும், அனைத்துத் துறை அலுவலர்களும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். பட்டா வழங்குவதோடு மட்டுமின்றி அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டித் தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த முகாமில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அரங்குகளை பார்வையிட்டு, அரசின் திட்டங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். அரசின் திட்டங்கள் பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இன்றைய முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பிறப்புச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், தாமத இறப்புச்சான்று, நலவாரிய அட்டை, இலவச தேய்புப் பெட்டி, வருவாய்த்துறை(சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில் கல்வி உதவித்தொகை 10 பயனாளிகளுக்கு ரூ.27,750 மதிப்பீட்டிலும், இறப்பு உதவித்தொகை 12 பயனாளிகளுக்கு ரூ.2.70 இலட்சம் மதிப்பீட்டிலும், திருமண உதவித்தொகை 12 பயனாளிகளுக்கு ரூ.1.30 இலட்சம் மதிப்பீட்டிலும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 3 பயனாளிகளுக்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் 12 பயனாளிகளுக்கும், பெயர் நீக்கல் 3 பயனாளிகளுக்கும், முகவரி மாற்றம் 2 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் 39 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டம ஏற்றப்பட்ட இயற்கை உரம் 5 பயனாளிகளுக்கு ரூ.12,500 மதிப்பீட்டிலும் என மொத்தம் 110 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, பாச்சலுார் அரசு துணை சுகாதார நிலையம் சிகிச்சை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள், பாச்சலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அடிப்படைத் தேவைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பாச்சலுாரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மருந்துகள் இருப்பு மற்றும் விற்பனை குறித்து கேட்டறிந்தார்.

இம்முகாமில், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ம.திருநாவுக்கரசு, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.அ.பாண்டியன், உதவி இயக்குனர்(நிலம்) திரு.சிவக்குமார், தனித் துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, தாட்கோ மேலாளர் திருமதி கோ.முத்துச்செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி சி.பூங்கொடி, கொடைக்கானல் தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.எ.நடராஜன், கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ப.பாலமுருகன், துணைப்பதிவாளர்(பால்வளம்) திரு.தே.பவணந்தி, கொடைக்கானல் வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.தி.கண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.பா.சத்தியநாராயணன், தமிழ்நாடு வாழ்ந்துகாட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் திரு.பி.சுதாதேவி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.