Close

Mass contact-Palani – Muthunaickanpatty

Publish Date : 14/11/2024
.

செ.வெ.எண்:-24/2024

நாள்:-13.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

பழனி வட்டம், முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில் 187 பயனாளிகளுக்கு ரூ.32.60 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் இன்று(13.11.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 187 பயனாளிகளுக்கு ரூ.32.60 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.

முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சிரமமின்றி தீர்வு காண வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

மக்கள் தொடர்பு முகாமை பொறுத்தவரை, முகாம் நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, அந்த மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மக்கள் தொடர்பு முகாமில் அதற்கான தீர்வுகள் வழங்கப்படும். மேலும், மனுக்களுடன் ஏதேனும் ஆவணங்கள் இணைக்கப்படாமல் இருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரியப்படுத்தி, அந்த ஆவணங்களை பெற்று, இணைத்து அந்த மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும். இதுதான் மக்கள்தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும். மக்கள் தொடர்பு முகாம் பயன்பெற வேண்டிய நாள். மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் நாள்.

அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்கள் இங்கு தெளிவாக எடுத்துரைத்தனர். மேலும் அரசின் திட்டங்கள் தொடர்பாக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு, அதில் ஏதேனும் திட்டங்கள் தங்களுக்கு பயன்படுமாயின் அந்த திட்டங்கள் குறித்த தகவலை அறிந்து, விண்ணப்பித்து பயன்பெறலாம்.

அந்த வகையில் இந்த முகாமை முன்னிட்டு பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான 187 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டு, இன்றையதினம் மனுதாரர்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய முகாமில், வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா 5 பயனாளிகளுக்கும், முழுப்புலம் பட்டா மாறுதல் 17 நபர்களுக்கும், நத்தம் பட்டா நகல் 39 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை 2 பயனாளிகளுக்கும், உழவர் அட்டை 117 பயனாளிகளுக்கும், கலைஞரின் கனவு இல்லம் 7 பயனாளிகளுக்கும், என மொத்தம் 187 பயனாளிகளுக்கு ரூ.32.60 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், உங்களைத்தேடி உங்கள் ஊரில், மக்களுடன் முதல்வர் போன்ற திட்டங்களின் கீழ் நடைபெறும் முகாம்களிலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது பயிர் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் நோக்கம் என்னவென்றால், நிலம், சர்வே எண், இடம், பயிர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, இணையதளம் வாயிலாகவே விவசாயிகள் அடங்கல் சான்று பெறுவதற்கான வழிவகை ஏற்படுத்தும் நடவடிக்கைகளாகும். எனவே, தங்கள் பகுதிக்கு வரும் அலுவலர்கள் கேட்கும் தகவல்களை அளித்து அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம் சிறந்த மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருத்துவ சிகிச்சைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது. பிரசவகால உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் சிறந்த மருத்துவ சேவைகளை அளிக்கும் வகையில் மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். எனவே, பெண்கள் தங்கள் உடல் நலன் தொடர்பாக உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். கருவுற்ற நாளில் இருந்து மாதந்தோறும் உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பிரசவகாலத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம்.

அரசின் திட்டங்களை அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இம்முகாமில், வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.இராஜாமணி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பூ.சு.கமலக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபுபாண்டியன், பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சிவசெல்வி, துணைத்தலைவர் திரு.சந்திசேகர், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.