Mass contact – Sriramapuram Panchayat – Vedasandur Union
செ.வெ.எண்:-41/2024
நாள்:-14.08.2024
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், ஸ்ரீராமபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 294 பயனாளிகளுக்கு ரூ.35.42 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், ஸ்ரீராமபுரம் கிராமத்தில் இன்று(14.08.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 294 பயனாளிகளுக்கு ரூ.35.42 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.
முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சிரமமின்றி தீர்வு காண வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.
மக்கள் தொடர்பு முகாமை பொறுத்தவரை, முகாம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர் மூலம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, அந்த மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மக்கள் தொடர்பு முகாமில் அதற்கான தீர்வுகள் வழங்கப்படும். மேலும், மனுக்களுடன் ஏதேனும் ஆவணங்கள் இணைக்கப்படாமல் இருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரியப்படுத்தி, அந்த ஆவணங்களை பெற்று, இணைத்து அந்த மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும். இதுதான் மக்கள்தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும். அந்த வகையில் இந்த முகாமில் 245 நபர்கள் முன்னதாகவே மனுக்கள் அளித்து, அதன்மூலம் இன்றையதினம் தீர்வு கண்டுள்ளனர்.
பொதுமக்கள் பட்டா கோரி இ-சேவை மையங்களில் ரூ.60 கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் போதும், உங்களுக்கான பட்டா வீடு தேடி வரும். முழுப்புலம் பட்டா எனில் 15 நாட்களிலும், உட்பிரிவு பட்டா எனில் 30 நாட்களிலும் வந்துவிடும். மேலும், உங்கள் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வப்போது கைப்பேசிக்கு தகவல் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தங்கள் மனுவின் நிலை குறித்து வீட்டிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.
அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்கள் இங்கு தெளிவாக எடுத்துரைத்தனர். மேலும் அரசின் திட்டங்கள் தொடர்பாக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு, அதில் ஏதேனும் திட்டங்கள் தங்களுக்கு பயன்படுமாயின் அந்த திட்டங்கள் குறித்த தகவலை அறிந்து, விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இன்றைய முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 37 பயனாளிகளுக்கு ரூ.17.62 இலட்சம் மதிப்பீட்டிலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை(சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித்துறை(வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.12.22 இலட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.30,000 மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.28,000 மதிப்பீட்டிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 237 பயனாளிகளுக்கு ரூ.1.97 இலட்சம் மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.92 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 294 பயனாளிகளுக்கு ரூ.35.42 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ், 18.12.2023-ஆம் தேதி முதல் 08.02.2024 வரை 59 முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெறப்பட்ட மொத்தம் 21,584 மனுக்களில் 20,426 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன. அடுத்தக்கட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6,328 வீடுகள் கட்டப்படவுள்ளன.
வீடுகட்ட குறைந்தபட்ச பரப்பளவு சமையலறை உட்பட 360 சதுர அடியாக இருக்க வேண்டும். அதில் 300 சதுர அடி ஆர்சிசி கூரை, மீதமுள்ள 60 சதுர அடி பயனாளியின் விருப்பப்படி எரியாத பொருள்கொண்ட மற்ற வகை கூரையாக அமைக்கலாம். ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்படும். மேலும், ஒரு பயனாளி வீடு கட்டுவது என்பது அவரது எதிர்காலத்திற்காக வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் பணியாகும். இப்பயனாளிக்கு தகுதியிருப்பின் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 அல்லது கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கலாம். கலைஞர் கனவு இல்ல பயனாளிகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.1.00 இலட்சம் வரை கடனுதவி மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டம் தற்போது தமிழ்ப்புதல்வன் என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 5,112 மாணவர்கள் பயனடைகின்றனர்.
அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தற்போது, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
விலையில் மிதி வண்டி வழங்கும் திட்டத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 7,175 மாணவர்கள் மற்றும் 8,827 மாணவிகள் என மொத்தம் 16,002 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவிலான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அரசின் திட்டங்களை அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
இம்முகாமில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சௌடீஸ்வரி கோவிந்தன், துணைத் தலைவர் திரு.ஜி.தேவசகாயம், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி சு.ஜெயசித்ரகலா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சாமிநாதன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.ராமராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மேலாளர் திருமதி மு.சுகன்யா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.பி.சத்தியநாரயணன், மாவட்ட செயல் அலுவலர்(வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) திருமதி பி.சுதாதேவி, வட்டாட்சியர் திரு.சரவணன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி உமாமகேஸ்வரி, ஸ்ரீராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ப.முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.