MBBS BDS 7.5 Percent
செ.வெ.எண்:-17/2025
நாள்:-04.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
நீட் தேர்வு அடிப்படையில் 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பிற்குத் தேர்வான அரசுப் பள்ளி மாணவ/மாணவிகளை மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
தமிழ்நாடு அரசு மாணவ/மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வியை முடித்த மாணவ/மாணவியரின் உயர்கல்விப் படிப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிப்படிப்பை முடித்த மாணவ/மாணவியர் உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல், கலை/அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்து படிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசுப்பள்ளி மாணவ/மாணவியர் உயர்கல்வியில் சேர்ந்திடத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கிராமப்புறங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். ஏராளமான மாணவ/மாணவியர் தங்கள் பள்ளிக் கல்வியை கிராமப்புற பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் உயர்கல்வியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு வழிகாட்டும் வகையில் நீட் (NEET – NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) தேர்வுக்கு மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கட்டணமில்லா பயிற்சி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வழங்கப்பட்டது. வெகுதுாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் மாணவ/மாணவியர் தங்கி பயிலும் வகையில் உண்டு, உறைவிட பயிற்சியும் அளிக்கப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ/மாணவியருக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு பழனி வேலன் விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உண்டு, உறைவிடப் பயிற்சியாக நடைபெற்றது. இது தவிர உண்டு, உறைவிடம் அல்லாத பயிற்சியாக திண்டுக்கல், பழனி மற்றும் நத்தம் பகுதிகளில் நான்கு மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த முகாமில் 78 மாணவர்கள், 272 மாணவிகள் என மொத்தம் 350 பேர் பயிற்சி பெற்றனர். கட்டணமில்லா இப்பயிற்சியில் தேர்வுக்கான புத்தகங்கள், பல்வேறு வகையான வினா-விடைத்தாள் தொகுப்புகள் வழங்கப்பட்டன. மாதிரித்தேர்வுகள் OMR Sheets மூலம் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்டன. கட்டணமில்லா உணவு மற்றும் சிற்றுண்டி வசதிகள், மாணவ/மாணவியரின் பாதுகாப்பிற்கும், கண்காணிப்பிற்கும் பொறுப்பு ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் சுழற்சி முறையில் பணிபுரியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த மையத்தில் படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகள், சூழ்நிலைகள் மற்றும் தங்கும் வசதிகளும் செய்து தரப்பட்டன.
மருத்துவம், பல் மருத்துவப் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவம்/பல்மருத்துவப் படிப்பிற்கு 9 மாணவ/மாணவியர் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களுள் தாளையூத்து, பூம்பாறை, பாலசமுத்திரம், செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ/மாணவியர் 4 பேர் மற்றும் கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று 7.5% இடஒதுக்கீட்டில் பல் மருத்துவப் படிப்பிற்குத் தேர்வான 1 மாணவன் ஆகிய 5 பேருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (04.08.2025) மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பொன்னாடை அணிவித்து, புத்தகம் மற்றும் ஸ்டெதஸ்கோப் பரிசாக வழங்கிப் பாராட்டினார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.