Close

Medical college Bus

Publish Date : 24/07/2025
.

செ.வெ.எண்:-73/2025

நாள்:-22.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்காக திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை (Dindigul Education Trust) மூலம் வழங்கப்பட்ட பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில்(அடியனுாத்து), திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(22.07.2025) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்காக அரசின் திட்டங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் என 27 மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. கடந்த வாரம் ரூ.40.00 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற மற்றும் புதிய மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். மேலும், மாவட்டம் முழுவதும் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மருத்துவக் கல்லுாரி மாணவ, மாணவிகள் திண்டுக்கல்லில் உள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வந்து செல்வதற்கு பேருந்து வசதி தேவை என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலம் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேருந்து சேவை திண்டுக்கல் மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இணைந்து இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சேவை என்பது பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புடைய சேவை பணியாகும். மருத்துவக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் மருத்துவப் பணியை அர்ப்பணிப்புடன் சேவை செய்திட வேண்டும்.

ஏழை, எளிய பொதுமக்களின் அதிகபட்ச தேவைகளில் ஒன்றாக மருத்துவ தேவை உள்ளது. எனவே, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மருத்துவப் பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையில் மருத்துவப் படிப்பு பயிலும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி நன்கு படித்து மக்களுக்கு சேவையாற்றிட உங்களுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும். இந்தப் பணியில் எத்தனை சவால்கள் இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு, சேவையாற்றிட வேண்டும்.

இந்த சமூகத்திற்கு ஏதாவது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பது ஒரு மனிதனின் அடிப்படை கடமை. எந்தெந்த வசதிகளையும், வாய்ப்புகளையும் இந்த சமூகத்திலிருந்து பெற்று, நம்முடைய வாழ்கையை மேம்படுத்திய பிறகு, சமூகத்திற்கு நாம் ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பை அளிக்க வேண்டும். அந்த வகையில், மருத்துவப் படிப்பு மாணவ, மாணவிகள் படிப்பு முடிந்து எந்த துறைக்குச் சென்றாலும் மக்களுக்கான பங்களிப்பு அளிக்கும் வகையில் உங்கள் சேவை இருக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மரு.இரா.சுகந்தி இராஜகுமாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.