Monday Grievance Day Petition

செ.வெ.எண்:-32/2025
நாள்:-10.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.44.80 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(10.03.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 190 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றையக் கூட்டத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) மற்றும் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 50 சதவீதம் மானியத்தில் 2 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.12.00 இலட்சம், தனிநபர் கடனாக ஒரு பயனாளிக்கு ரூ.1.50 இலட்சம் (இதில் மானியம் ரூ.50,000), தொழிலாளர் நல வாரியம் சார்பில் இயற்கை மரண நிவாரண உதவியாக 4 பயனாளிகளுக்கு தலா ரூ.55,0000 வீதம் ரூ.2.20 இலட்சம் மதிப்பீட்டில் நிவாரண உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 16 பயனாளிகளுக்கு தலா ரூ.1.00 இலட்சம் மதிப்பீட்டில் செயற்கை கால்கள், ஒரு பயனாளிக்கு 3 சக்கர பேட்டரி வாகனம் ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் என ஆக மொத்தம் ரூ.44.80 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) மற்றும் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடனுதவி பெற்ற கன்னிவாடி பேரூராட்சி, ஜெனகை மாரியம்மன் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தெரிவித்ததாவது:-
எங்கள் குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஏழை குடும்பத்தை சார்ந்தவர்கள். நாங்கள் சுயமாக தொழில் தொடங்கிட விரும்பினோம். ஆனால் போதிய பொருளாதார நிலை இன்றி நாங்கள் தவித்து வந்தோம். அப்போதுதான், எங்களைப் போன்ற ஏழை, எளிய மக்கள் சுயதொழில் தொடங்கிட தாட்கோ மூலம் மானியக் கடனுதவி வழங்கப்படுவதை அறிந்து, உரிய ஆவணங்களுடன் கடனுதவிக் கோரி விண்ணப்பித்தோம். எங்கள் குழுவிற்கு ரூ.12.00 இலட்சம் கடனுதவி திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வழங்குவதற்கான ஆணைகளை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இதில் ரூ.6.00 இலட்சம் மானியமாக எங்களுக்கு கிடைத்துள்ளது. இதை வைத்து நாங்கள் அரிசிக் கடை தொடங்கவுள்ளோம். எங்களைப்போன்ற ஏழை எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக இதுபோன்ற மானியக்கடனுதவித் திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்தனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) மற்றும் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடனுதவி பெற்ற கன்னிவாடி பேரூராட்சி, திருப்பதி மகளிர் சுயஉதவிக்குழுவினர் தெரிவித்ததாவது:-
எங்கள் குழுவில் 10 உறுப்பினர்கள் உள்ளனர். துாய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வருகிறோம். ஏழை குடும்பங்களை சார்ந்த எங்களிடம் போதிய பொருளாதார வசதி இல்லாததால் நாங்கள் சுயமாக தொழில் தொடங்கிட முடியாமல் சிரமப்பட்டு வந்தோம். அப்போதுதான், தாட்கோ மூலம் மானியக் கடனுதவி வழங்கப்படுவதை அறிந்து, உரிய ஆவணங்களுடன் கடனுதவிக் கோரி விண்ணப்பித்தோம். எங்கள் குழுவிற்கு ரூ.12.00 இலட்சம் கடனுதவி திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வழங்குவதற்கான ஆணைகளை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இதில் ரூ.6.00 இலட்சம் கடனுதவியாகவும், ரூ.6.00 இலட்சம் மானியமாகவும் எங்களுக்கு கிடைத்துள்ளது. இதை வைத்து நாங்கள் அரிசிக் கடை தொடங்கவுள்ளோம். ஏழை, எளிய மக்களை தொழில் முனைவோராக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இதுபோன்ற மானியக்கடனுதவித் திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, உதவி ஆணையாளர்(கலால்) திரு.ஆர்.பால்பாண்டி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.செ.முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.மொ.கு.அன்பழகன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) மாவட்ட மேலாளர் திருமதி கோ.முத்துச்செல்வி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி சுபாஷினி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.தங்கவேலு, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.