Monday Grievance Day Petition
செ.வெ.எண்:-43/2025
நாள்:-12.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(12.05.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 196 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றைய கூட்டத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 550க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் துாய்மைக்காவலர்களின் குழந்தைகளான திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜிவஜோதி(581 மதிப்பெண்), திண்டுக்கல் மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மணி(550 மதிப்பெண்) ஆகியோருக்கும், மாற்றுத்திறனாளி பார்வையற்றோர் பிரிவில் 535 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவன் சிவரஞ்சன் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிடும் வகையில் வன்னியபாறைப்பட்டியைச் சேர்ந்த திருமதி மங்களம் என்பவருக்கு பணி ஆணையை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வசித்து வரும் கணித ஆசிரியர்களான திரு.கணேசன் மற்றும் திருமதி பிரதீபா தம்பதியரின் இரண்டாவது மகனான அபினவ் பிரத்யூஷ் என்ற மாணவன் சிறு வயது முதலே கணக்குகளைத் தீர்ப்பதில் அதிக ஆர்வமுடன் இருந்து வருகிறார். எத்தனை எண்களைக் கொண்ட கணக்குகளைக் கொடுத்தாலும் மிகவும் இலகுவாக அவற்றிற்கு விடையளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வந்தார். மேலும், இவருடைய திறனை உலக சாதனையாகப் பதிவு செய்ய நினைத்த மாணவன் கல்வி கற்று வரும், பழனியில் அமைந்துள்ள அக்சயா அகாடமி கேம்பஸ் பள்ளி நிர்வாகம் அதற்கான நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடத்தினர். அப்போது, மாணவன் அபினவ்பிரத்யூஷ், சமவாய்ப்பு முறையில் ஈரிலக்க எண்ணை ஈரிலக்க எண்ணால் பெருக்குதல் என்ற அடிப்படையில் (5 நிமிடத்தில் 58) கணக்குகளுக்கு சரியாக பதிலளித்தார். ஈரிலக்க எண்ணின் கனத்தை கண்டுபிடித்தல் என்ற அடிப்படையில் 20 கணக்குகளுக்கு1 நிமிடம் மற்றும் 21 நொடிகளில் சரியாக விடையளித்தார். மூவிலக்க எண்ணின் வர்க்கத்தை கண்டுபிடித்தல் என்ற அடிப்படையில் 2 நிமிடங்களில் 10 கணக்குகளுக்கு விடையளித்தார். பிறந்த தேதி கூறினால் பிறந்த கிழமை கண்டுபிடித்தல் என்ற அடிப்படையில் 3 நிமிடங்களில் 20 பிறந்த நாட்களுக்கு நாள் குறிப்பிட்டார். ஐந்திலக்க எண்ணை ஐந்திலக்க எண்ணால் பெருக்குதல் என்ற அடிப்படையில் 5 நிமிடங்களில் 10 கணக்குகளுக்கு சரியாக தீர்வெழுதினார். மாணவனின் முயற்சியை முறைப்படி பரிசோதனை செய்த நடுவர்கள் உலக சாதனையாகப் பதிவு செய்தனர்.
செற்கை நுண்ணறிவிற்கே சூளுரைக்கும் இயற்கை நுண்ணறிவாளன் எனும் பட்டம் பெற்று சோழன் புக் ஆப் வேர்ல்டு ரிகார்ட்ஸ்(CHOLAN BOOK OF WORLD RECORDS) உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவர் அபினவ் பிரத்யூஷ்-க்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசு வழங்கி பாராட்டினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.