Monday Grievance Day Petition
செ.வெ.எண்:-21/2025
நாள்:-07.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(07.07.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 420 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றைய கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் செயல்படும் 40 அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் 950 குழந்தைகளுக்கு திண்டுக்கல் Children Charitable Trust மூலமாக முன்பருவ கல்வி உதவி சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் (கிராமம்) வட்டாரத்தில் செயல்படும் 10 அங்கன்வாடி மையங்களுக்கு முன்பருவ கல்வி உதவி சாதனங்கள், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பாக 1 மாற்றுத்திறனாளிக்கு பால்மாடு கடனுதவி ரூ.50,000/-யும், 1 மாற்றுத்திறனாளிக்கு ஆடு வளர்ப்பதற்கு கடனுதவி ரூ.50,000/-யும் என மொத்தம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,00,000/- கடனுதவியும், சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சார்ந்தோருக்கான குடும்ப ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.11,500/- பெறுவதற்கான ஆணையும், தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 03.05.2025 முதல் 17.05.2025 வரை பீகார் மாநிலத்தில் நடைபெற்றது. தமிழக அணி சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவிகள் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். இதில் 4 மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதியில் இருந்து தலா ரூ.12,000/- வீதம் என மொத்தம் ரூ.48,000/-க்கான விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.C.வினோதினி,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.சிவக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.