Monday Grievance Day Petition
செ.வெ.எண்:-65/2025
நாள்:-27.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.10.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 212 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1,500/- மதிப்பீட்டிலான மண்புழு உரபடுகையினையும், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1,000/- மதிப்பீட்டிலான தார்பாலீன்களையும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 1 பயனாளிக்கு ரூ.2,075/- மதிப்பீட்டிலான மின்கல தெளிப்பானையும், விதை சுத்திகரிப்பான் நிலையம் அமைப்பதற்கு பழனியில் செயல்பட்டு வரும் மக்காச்சோளம் மற்றும் சோளம் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் வத்தலக்குண்டு பட்டிவீரன்பட்டியில் செயல்பட்டு வரும் கோடை மலைப்பயிர்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு தலா ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டிலான காசோலைகள் என மொத்தம் ரூ.12,07,075/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திரு.க.செல்லப்பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.மகாலிங்கம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.அன்பழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.நாகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.