Monitoring Officer Inspection
செ.வெ.எண்:-40/2024
நாள்: 14.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால்வாய்களை தமிழ்நாடு மாநில வாணிப கழகம், மேலாண்மை இயக்குநர் / திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில், வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால்வாய்களை தமிழ்நாடு மாநில வாணிப கழகம், மேலாண்மை இயக்குநர் / திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் முன்னிலையில் இன்று(14.12.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மாநில வாணிப கழகம், மேலாண்மை இயக்குநர் / திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் மழைகாலங்களில் உபரிநீர் வழிந்தோடி குள்ளனம்பட்டி முத்துசாமி குளம் நிறைந்து, அங்கிருந்து ரயில்வே சுரங்கப்பாதை ஒத்தக்கண்பாலம் கால்வாய் வழியாக அரண்மனைக்குளத்திற்கு சென்றடைகிறது. பாரதிபுரம், ஒத்தக்கன்பாலம் பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் ஒத்தக்கண்பாலம் கால்வாய் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அரண்மனைக்குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர் நத்தர்ஷா தெரு காய்வாய் மற்றும் யானைத்தெப்பம் கால்வாய் வழியாக பாறைப்பட்டி குளம் சென்றடைகிறது. எனவே, நத்தர்ஷா தெரு காய்வாய் மற்றும் யானைத்தெப்பம் கால்வாய் ஆகிய 2 இடங்களிலும் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாறைப்பட்டி குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேறி முத்தழகுப்பட்டி வாய்க்கால் வழியாக சென்று குடகனாற்றில் கலக்கிறது.
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 இடங்களில் பெரிய அளவிலான கால்வாய்கள் மொத்தம் 12 கி.மீட்டர் நீளத்திற்கு உள்ளன. மழைகாலம் தொடங்குவதற்கு முன்னர் இந்த கால்வாய்களை துார்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு துார்வாரும் பணிகள் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஒத்தக்கண்பாலம், நத்தர்ஷா தெரு, பேகம்பூரில் யானைத்தொப்பம் ஆகிய பகுதியில் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள துார்வாரும் பணிகள் குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து மழைக்காலங்களில் மழைநீர் தடையின்றி செல்ல வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கால்வாய்களில் குப்பைகள் சேராமல் தொடர்ந்து கண்காணித்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் கால்வாய்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். இதன்மூலம் மழைக்காலங்களில் கால்வாய்களில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படுவதுடன், மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என தமிழ்நாடு மாநில வாணிப கழகம், மேலாண்மை இயக்குநர் / திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், மாநகராட்சி ஆணையாளர் திரு.ரவிச்சந்திரன், துணை மேயர் திரு.ச.ராஜப்பா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.