Close

Muthamizh Murugan Maanadu 2024 – Inauguration

Publish Date : 28/08/2024

செய்தி வெளியீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறம் காக்கும் நல்லாட்சியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மங்கள இசையுடன் தொடங்கியது.

மாண்புமிகு அமைச்சர்கள் திரு.இ.பெரியசாமி அவர்கள், திரு.அர.சக்கரபாணி அவர்கள், திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (24.08.2024) தொடங்கியது. முதல் நிகழ்வாக தவத்திரு ஆதீன பெருமக்கள் திருவிளக்கேற்றிட, தவத்திரு இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.இ. பெரியசாமி, திரு.அர.சக்கரபாணி, திரு.பி.கே. சேகர்பாபு ஆகியோர் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள வேல் அரங்கம், அறுபடைவீடுகளின் காட்சி அரங்கங்கள், பார்ப்பவர்கள் பரவசமடையும் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி ஆகியவற்றை பார்வையிட்டனர்.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் அருணகிரிநாதர் அரங்கத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். பின்னர், தவத்திரு ஆதீன பெருமக்கள் ஆசியுரையும், மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் திரு.ஆர்.சுப்ரமணியன், திரு.பி.புகழேந்தி, திரு.வி.சிவஞானம், திரு.பி.வேல்முருகன் ஆகியோர் சிறப்புரையும் ஆற்றினர். அதனைத் தொடர்ந்து மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வு மலர்கள் வெளியிடப்பட்டன.

உலகளாவிய உயர்வேலன் என்னும் தலைப்பில் கருத்தரங்கமும், கலைமாமணி திரு.சுகிசிவம் அவர்களின் தலைமையில் முருகன் புகழ் வளர்க்கும் முத்தமிழில் “முந்து தமிழ்“ என்ற தலைப்பில் சிந்தனை மேடையும், கந்தன் அனுபூதி பாடல்கள், இசை அருட்செல்வி தியாவின் இசை நிகழ்ச்சி, அறுபடை வீட்டின் நாட்டிய நிகழ்ச்சி, திரு.வீரமணி ராஜு குழுவினரின் பக்தி இசை, மாண்பமை நீதியரசர் (ஓய்வு) திரு.சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் அடியார்க்கு அருளும் அழகன் என்ற கருத்தரங்கம், திருமதி சுதா ரகுநாதன், திருமதி ஊர்மிளா சத்திய நாராயணன் உள்ளிட்ட இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தருமபுர ஆதீனம் சீர்வளர்சீர் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் சீர்வளர்சீர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் சீர்வளர்சீர் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சீர்வளர்சீர் சிவஞான பாலய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் சீர்வளர்சீர் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பேரூர் ஆதீனம் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், செங்கோல் ஆதீனம் குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான சுவாமிகள், சிரவை ஆதீனம் சீர்வளர்சீர் குமரகுரபர சுவாமிகள், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயம் சீர்வளர்சீர் சிவ சண்முக ஆறுமுகம் மெய்ஞான சிவாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடம் குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் காசிவாசி முத்துக்குமார சுவாமித்தம்பிரான், சூரியனார்கோயில் ஆதீனம் சீர்வளர்சீர் மகாலிங்க தேசிக மரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சீர்வளர்சீர் சத்தியஞான மகாதேவ தேசிக மரமாச்சாரிய சுவாமிகள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இ.ஆ.ப., இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்,

வெளியீடு : உதவி இயக்குநர் /மக்கள் தொடர்பு, இந்து சமய அறநிலையத்துறை, சென்னை-34.