Close

Naan Muthalvan – Kalluri Kanavu

Publish Date : 13/05/2024

செ.வெ.எண்:-08/2024

நாள்:-07.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

“நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ், உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி திண்டுக்கல் ஜி.டி.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 09.05.2024 அன்று நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ், 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., முன்னிலையில் திண்டுக்கல் ஜி.டி.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 09.05.2024 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெறவுள்ளது.

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதலை வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் எவ்வித விடுதலின்றி உயர் கல்வியில் சேர வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கல்வி நிறுவனங்களில் தங்களுக்கு கிடைக்கும் விருப்பங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது, கல்விக்கடன்கள், உதவித்தொகைகள் குறித்த வழிகாட்டுதல்கள் புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், உயர் கல்வி தொடர்பாக மாணவர்களை ஊக்குவித்தல், பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், வணிகம் மற்றும் கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன்வளத்துறை சார்ந்த படிப்புகள், அரசு வேலைவாய்ப்புகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

மேலும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது தொடர்பாக, போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று புதிதாக பதவியேற்றுள்ள அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டித் தேர்வுக்கு தயாராவது, தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து உரையாற்றவுள்ளனர்.

எனவே அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த “கல்லூரி கனவு“ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.