Close

Nalam Kaakum Stalin (NKS) Camp

Publish Date : 02/09/2025
.

செ.வெ.எண்:-109/2025

நாள்:-30.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்,”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை, தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் லூர்து மாதா உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமினை இன்று (30.08.2025) பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை, சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக (02.08.2025) அன்று தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் புதிய அத்தியாயமாக ”நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையில் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 என்ற திட்டங்களின் வரிசையில் தற்போது நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள்.

இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 முகாம்கள் வீதம் 45 முகாம்கள் தொடங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 17 சிறப்பு மருத்துத் துறைகள் உட்பட 45க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த முகாம்களில் உயர் சிகிச்சை மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் பணிகளில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் சுமார் 2000 மருத்துவப் பயனாளிகள் கலந்துகொள்ளும் வகையில் அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை போல் இந்த முகாம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கே வந்து சேவை மேற்கொள்ளப்படுகிறது. முகாம்களில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதயவியல், எலும்பியல், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம். குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், பிசியோதெரபி, கதிரியக்கவியல், நுரையீரல் மருத்துவம், கண் மருத்துவம், காது-மூக்கு-தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், நீரிழிவு நோய், நரம்பியல் தொடர்பான அனைத்து வகை சிகிச்சைக்கான சேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றிடும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் பயனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த முகாம்களில், மருத்துவப் பயனாளிகளின் வருகை பதிவு, மேற்கொள்ளும் சிகிச்சைகள் என அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படுகிறதா எனவும், ஒவ்வொரு மருத்துவப் பயனாளிக்கும் அடுத்தடுத்து வழங்கப்படும் சிகிச்சைகள் பதிவு செய்யப்படுகிறதா எனவும், மருத்துவ சிகிச்சைகள் சிறப்பான முறையில் நடைபெறுகிறதா எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு அங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் இம்முகாமில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட 06 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை, 02 பயனாளிகளுக்கு புதுப்பித்த அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் 05 பயனாளிகளுக்கு பேருந்து பயண அட்டை மற்றும் 05 பயனாளிகளுக்கு இரயில் பயண அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திரு.செந்தில்முருகன், மாவட்ட சுகாதார அலுவலர்(திண்டுக்கல்) மரு.ஆர்.செல்வக்குமார், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.