Close

National Handlooms Day-Exhibition-medical camp

Publish Date : 08/08/2025
.

செ.வெ.எண்:-30/2025

நாள்:-07.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ரூ.5.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட கைத்தறித்துறை சார்பில் 11வது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் அருட்பெருஞ்ஜோதி எஸ்.எஸ்.கே. விஜயலட்சுமி மஹாலில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(07.08.2025) திறந்து வைத்து, கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு ரூ.5.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:-

சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையில் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று தேசிய கைத்தறி தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கைத்தறி நெசவுத் தொழில் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கைத்தறி நெசவுத் தொழில் நீண்ட காலமாக பாரம்பரியத்துடன் நடைபெற்று வருகிறது.

தொழில் வளர்ச்சியில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டாலும், பாரம்பரியம் மாறாமல், நேர்த்தியான முறையில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறிக்கு என தனிச்சிறப்பு உள்ளது. சமூகத்தில் பெரிய அளவில் மதிப்பும், மரியாதையும் உள்ளது. கைத்தறியின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் பொதுமக்களிடையே கொண்டு போய் சேர்ப்பதற்காக ஆகஸ்டு 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று 11வது தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், கைத்தறித்துறை சார்பில் இந்த ஆண்டு 11வது தேசிய கைத்தறி தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், கைத்தறி கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், செயற்கை பட்டு சேலைகள், Tie & Dye காட்டன் சேலைகள், பம்பர் காட்டன் சேலைகள் மற்றும் பெட்சீட் உள்ளிட்ட கைத்தறி ஜவுளி ரகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கைத்தறி உற்பத்திகளை சந்தைப்படுத்துதல் மிகவும் முக்கியமானது. அந்த வகையில் தற்போது ஆன்லைன் சந்தை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதுபோன்ற சந்தை வாய்ப்புகளை கைத்தறி நெசவாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், கைத்தறி நெசவாளர்கள் புதிய யுத்திகளை பயன்படுத்தி, புதுப்புது வடிவமைப்புகளை உருவாக்கிட வேண்டும்.

கைத்தறி நெசவு வேலை என்பது மதிப்பு மிக்க, மரியாதைக்குரிய சமூக சேவையாகவே கருதப்படுகிறது.

கைத்தறி நெசவாளர்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அரசு சார்பில் தொழில் கடனுதவிகள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கைத்தறி நெசவுத் தொழிலின் வளர்ச்சிக்காகவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நெசவாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அரசின் திட்டங்களை நல்ல முறையின் பயன்படுத்தி, நெசவாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.

இன்றைய விழாவில், வயது முதிர்ந்த கைத்தறி நெசவாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கௌரவித்தார். மேலும், கைத்தறி ஆதரவுத் திட்டத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 10 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.42,000 மதிப்பிலான அச்சுவடி, பண்ணை மற்றும் நாடா உள்ளிட்ட தறி உபகரணங்கள், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் நெசவாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 8 நபர்களுக்கு மொத்தம் ரூ.5.50 இலட்சம் மதிப்பிலான கடன் தொகைகள் என மொத்தம் ரூ.5.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். கைத்தறி கண்காட்சி அரங்குகள் மற்றும் மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

மேலும், திண்டுக்கல் மாநகராட்சி சுகாதாரத் துறையுடன் இணைந்து கைத்தறி நெசவாளர்களின் நலம் காக்கும் வகையில் பொது மருத்துவ பரிசோதனை முகாம், வாசன் கண் மருத்துவமனை மூலம் நெசவாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் கைத்தறி நெசவாளர்களுக்கு உடல் நலம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள், மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில், கைத்தறித்துறை உதவி இயக்குநர் திரு.வ.கார்த்திகேயன், துறை அலுவலர்கள், நெசவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.