Close

NEET Training Class

Publish Date : 27/03/2025
.

செ.வெ.எண்:-70/2025

நாள்:-26.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

நீட் தேர்வுக்கான உண்டு, உறைவிட பயிற்சி முகாம் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் மேல்நிலைப்பள்ளியில், நீட் தேர்வுக்கான உண்டு, உறைவிட பயிற்சி முகாம் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.03.2025) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வியை முடித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வி படிப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பள்ளிப்படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்து படிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் வழிகாட்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்திட தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை கிராமப்புறங்கள் நிறைந்த மாவட்டம். ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிக் கல்வியை கிராமப்புற பள்ளிகளில் படித்துள்ளனர். அவர்கள் உயர்கல்வியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு வழிகாட்டும் வகையில் நீட் (NEET – NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) தேர்வுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒத்துழைப்புடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள ஆர்வத்துடன் வந்துள்ளனர். வெகுதுாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் தங்கி பயிலும் வகையில் உண்டு, உறைவிட பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு பழனி ஊராட்சி ஒன்றியத்தில் வேலன் விகாஸ் பள்ளியில் உண்டு, உறைவிடப் பயிற்சி முகாம் 28.03.2025-ஆம் தேதி முதல் 30.04.2025-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 67 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 378 மாணவ, மாணவிகள் நீட்தேர்வு பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். பயிற்சியானது சிறப்பான முறையில் வழங்கப்படவுள்ளது. இலவச பயிற்சி புத்தகப்பொருட்கள், பல்வேறு வகையான வினா-விடைத்தாள் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன. இலவச மாதிரித்தேர்வுகளை நடத்தப்படவுள்ளன. நல்ல உணவு மற்றும் சிற்றுண்டி வசதிகள் வழங்கப்படும். மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்கும், கண்காணிப்பிற்கும் பொறுப்பு ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் சுழற்சி முறையில் பணிபுரியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கும் அறையில் கட்டில் வசதியும், குளியலறை வசதியும் உள்ளது. உண்டு, உறைவிடப் பயிற்சி முகாம், சிறப்புத் தேர்வுகளுடன் நடைபெறும்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்திட அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதைமட்டும் கருத்தில் கொள்ளாமல் நீட் தேர்வில் தேசிய அளவில் தேர்ச்சி பெற்று ஓபன் போட்டியில் அதிக மருத்துவ படிப்பிற்கன இடங்களை பிடிக்க போட்டித் தேர்வுக்கு தயாராகிட வேண்டும்.

மாணவ, மாணவிகள் கடின உழைப்பு, கவனம், முழுமையான ஈடுபாடு, தன்னொழுக்கம், மனதை முழுமையாக ஒருமுகப்படுத்தி பயிற்சி பெறுவதன் மூலம் தேர்வில் வெற்றி பெறலாம். நல்ல மனநிலை மற்றும் உடல் நலத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். நீட் தேர்வில் தவறான விடையளித்தால் அதற்கு நெகட்டிவ் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு தேர்வு எழுத வேண்டும். தேர்விற்கு மிகக்குறைவான நாட்களே உள்ளதால், மாணவ, மாணவிகள் மனதை கட்டுப்படுத்தி, கவனத்தை சிதற விடாமல் படிக்க வேண்டும். இந்த ஒருமாதம் கஷ்டப்பட்டு படித்தால் அதன் பலன் கிடைக்கும்போது, வாழ்க்கையில் வெற்றி கிடைத்திடும். உயர்கல்வி முடித்து வேலைவாய்ப்பு பெற்று உங்கள் சொந்த காலில் நீங்கள் நிற்பதை பார்க்கும்போது பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைவர். ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அடம் பிடிக்கனும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். கல்வியை நேசித்தால் கல்வி உங்களை நேசிக்கும், உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். ஒருவருடைய பிறப்பு சாதாரணமாக இருந்தாலும், இறப்பு சரித்திரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

மனதளவிலும், உடலளவிலும் தயார்படுத்திக்கொண்டு, படித்து, எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பை அடைய இந்த பயிற்சி வகுப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா, குளோபல் சொல்யூசன்ஸ் இயக்குநர்கள் திரு.விமல், திரு.லோகேஷ், திரு.ஆனந்த், ஆசிரியர்கள், மாணவி, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.