Close

New India Literacy Programme Meeting

Publish Date : 29/05/2024
.

செ.வெ.எண்:-27/2024

நாள்:-23.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

“புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027“ செயல்படுத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027“ (New India Literacy Programme) செயல்படுத்தல் தொடர்பாக மாவட்ட எழுத்தறிவு முனைப்பு ஆணையக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 10,80,938 ஆண்கள், 10,78,837 பெண்கள் என மொத்த மக்கள் தொகை 21,59,775 என்ற அளவில் உள்ளது. இதில் எழுத்தறிவு பெற்ற ஆண்கள் 84.23 சதவீதமாகவும், பெண்கள் 68.33 சதவீதமாகவும் என மொத்த எழுத்தறிவு பெற்றவர்கள் 76.28 சதவீதமாக உள்ளது. இதில் 0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 2,16,576 ஆக உள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் வாயிலாக முற்றிலும் தன்னார்வலர் முறையில் கற்போம் எழுதுவோம் திட்டம் மற்றும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 என்ற ஐந்தாண்டுக்கான வயது வந்தோர் கல்வித் திட்டங்களின் மூலம் 2023-2024-ஆம் கல்வியாண்டில் 17,523 கற்போர் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 2021-2022-ஆம் ஆண்டில் கற்போம் எழுதுவோம் இயக்கம் மூலம் 11,204 நபர்களும், 2022-2023-ஆம் ஆண்டில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் மூலம் 17,523 நபர்களும்,(2023-2024-ஆம் ஆண்டில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் மூலம் 17,523 நபர்களும் என 2021-2024 ஆம் கல்வியாண்டு வரை மொத்தம் 36,250 நபர்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்வில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் “புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027“ செயல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இத்திட்டமானது 2024-2025-ஆம் ஆண்டிலும் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த கற்பித்தல் கற்றல் பணி 2024-ஆம் செப்டம்பர் மாதம் தொடங்கி 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தினமும் 2 மணி நேரம் வீதம் 200 மணி நேரம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக, 15 வயதிற்கு மேற்பட்ட கல்வியறிவு பெறாத நபர்களைக் கண்டறிந்து அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு வழங்குதல், நிதிசார்ந்த கல்வியறிவு, தகவல் மற்றும் தொழில்நுட்பம், உடல் நலம் மற்றும் விழிப்புணர்வுக் கல்வி, குழந்தை நலம் மற்றும் கல்வி, வணிக கல்வியறிவு மற்றும் குடும்பநலம், தொழில்சார்ந்து திறன் வளர்ச்சி, உள்ளூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் சார்ந்து அறிதல், அடிப்படை மற்றும் தொடர் கற்றல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதற்காக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் எழுதப்படிக்கத் தெரியாத கற்போர் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்பும் தன்னார்வலர் எண்ணிக்கை முறையான கணக்கெடுப்பு மூலம் கண்டறியப்படவுள்ளது. தமிழ் மொழியில் எழுதப்படிக்கத் தெரியாத மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை எண்ணறிவைப் பெறாத நபர்கள் இக்கணக்கெடுப்பின் வாயிலாக கண்டறிய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 20.05.2024 வரை 9677 கற்போரும், கற்பித்தல் பயிற்சி அளிப்பதற்காக 750 தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அனைத்து கிராம ஊராட்சி, வார்டு அளவில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதோர் அனைவரையும் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி பள்ளிக் கல்வித்துறை மற்றும் அரசு சார் பொதுத்துறைகள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி சார்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண, சாரணியர், தேசிய மாணவர் படை மாணவர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள், நேரு இளையோர் மன்றம், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், படித்த இளைஞர்கள் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, மாவட்ட சமூக நல அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தொழிலாளர் உதவி ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழுந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்கள் துறைகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்பு வாயிலாக எழுதப் படிக்கத் தெரியாதோரை கண்டறிந்து, திண்டுக்கல் மாவட்டத்தை 100 சதவீதம் எடுத்தறிவு பெற்ற மாவட்டமாக 2027-ஆம் ஆண்டுக்குள் உருவாக்கும் வகையில் திட்ட கண்காணிப்பு மற்றும் நடைமுறைகளை செயல்படுத்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் செயலாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.