NMP- Cook Assistant – Notification
செ.வெ.எண்:-27/2025
நாள்:-09.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி மற்றும் நகராட்சி வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் இன சுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம். காலிப்பணியிட விபரம் மற்றும் விண்ணப்பங்களை www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியம் ரூ.3,000-ல் நியமனம் செய்யப்படும். இப்பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை-1 (Level of Pay -ரூ.3000-9000) ஊதியம் வழங்கப்படும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
கல்வித்தகுதி:- குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:- பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (SC) ஆகியோர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினருக்கு 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு வயது நிர்ணயம் கணக்கிடப்படும்.
தூரச்சுற்றளவு:- நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ.க்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி – குக்கிராமம் – வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை).
மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு:- மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு கீழ்கண்ட குறைபாடு உள்ளவர்கள் மற்றும் உரிய அடையாள அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும். குறைவான பார்வைத்திறன் (மூக்குக் கண்ணாடி மூலம் சரி செய்யப்பட்டது), உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்), குணப்படுத்தப்பட்ட தொழு நோய் (40 சதவீதம் முழு செயல்பாட்டுத்திறன், உணர்திறன் மற்றும் செயல் திறன் உள்ளடக்கியது), திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு (மிதமான).
மேலும் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோh;கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை 29.04.2025 பிற்பகல் 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் துறை மூலம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும் பொழுது ஏற்படும் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பாகாது. விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று போன்றவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.