Close

On behalf of the Department of School Education, the monthly district education review meeting

Publish Date : 28/11/2024

செ.வெ.எண்:-75/2024

திண்டுக்கல் மாவட்டம்

பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாதாந்திர மாவட்ட கல்வி ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாதந்திர மாவட்ட கல்வி ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(27.11.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரைவேற்றப்படும் தொடர்புடைய பிற துறைகள் சார்ந்த தீர்மானங்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். குறிப்பாக மின்சாரத்துறை, நலவாழ்வுத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூகநலத்துறை, போக்குவரத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ந்த தீர்மானங்கள் கூடுதல் கவனத்துடன் விரைந்து நிரைவேற்றப்பட வேண்டும்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கையாக பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் இதுவரை இடிக்கப்பட்டவை, மீதம் இடிக்கப்பட வேண்டி கட்டிடங்கள் தொடர்பாக வாராந்திர அறிக்கை பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்பிக்கப்பட வேண்டும்.

தலைமையாசிரியர் கூட்டங்களில் சுகாதாரத்துறை அலுவலர்களை கலந்து கொள்ள செய்து, மாணவ, மாணவியர்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் விவரங்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெரிவிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

10-ம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு, மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வண்ணம் பள்ளி வாரியாக மற்றும் பாட வாரியாக மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீகிதம் தேர்ச்சி உறுதி செய்யப்பட வேண்டும்.

பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து உடனுக்குடன் பள்ளிகளில் சேர்க்கை செய்யப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி கழிப்பறை வசதி, குடிநீர் வசதி,மேல்நிலை நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்தல் தொடர்பாக கண்காணிக்கப்பட வேண்டும். அறிவியல் ஆய்வகங்களில் செய்முறை வகுப்புகள் குறிப்பிட்ட பாட வேலைகளில் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பேசினார்கள்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ப.உஷா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சுவாமிநாதன், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி புஷ்பகலா மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த மாவட்ட / வட்டார அளவிலான கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.