Close

Palani Kovil -Panguni Festival-meeting

Publish Date : 02/04/2025
.

செ.வெ.எண்:-03/2025

நாள்: 01.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெறவுள்ள பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா 05.04.2025 முதல் 14.04.2025 வரை நடைபெறவுள்ளது. பங்குனி உத்திர திருவிழாவை சிறப்பாக கொண்டாடிட முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(01.04.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உலக அளவில் பிரதிபெற்ற ஆன்மீக தலமாக விளங்குகிறது. பழனியில் நடைபெறவுள்ள பங்குனி உத்திர திருவிழா, கடந்த ஆண்டுகளைப் போலவே சிறப்பாக நடத்திட அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 05.04.2025 அன்று காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. 10.04.2025 அன்று மாலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம், அதனைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளி ரதமும் நடைபெறுகிறது. 11.04.2025 அன்று பங்குனி உத்திர தினத்தன்று, பங்குனி உத்திர திருத்தேர் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 14.04.2025 அன்று பங்குனி உத்திர திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் வருகை புரிகின்றனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக நிழற்பந்தல்கள் பல்வேறு இடங்களில் அமைக்கவும், குடிநீர் வசதி, மின்வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகள் போதுமான அளவு ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக தகவல்களை பெறுவதற்கும், குறைகளை தெரிவிப்பதற்கும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் திருக்கோயில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த கட்டுப்பாட்டு அறை அலுவலர்களை கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004259925 மற்றும் 04545-240293, 04545-241293, 04545-242236 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்லவும், பக்தர்களின் வருகைக்கேற்ப கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலக்காடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் வழித்தடங்களில் 10.04.2025 முதல் 15.04.2025 வரை சிறப்பு ரயில்கள் இயக்கவும், அவற்றின் வழித்தடம், நேரம் மற்றும் கட்டணம் குறித்த விபரம் பக்தர்கள் அறியும் வகையில் மத்திய பேருந்து நிலையம், சுற்றுலா பேருந்து நிலையம், மலைக்கோயில் ஆகிய இடங்களில் பக்தர்கள் பார்வைக்கு வைக்க ரயில்வே துறை அலுவலர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு ஏற்பாடாக முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவிழா நாட்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்கள் தயார் நிலையில் இருக்கவும், சண்முகாநதி மற்றும் இடும்பன் குளத்தின் அருகிலும் தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழனி நகராட்சியின் மூலம் சீரான குடிநீர் வழங்குவதற்கும், பொது கழிப்பறை சீராக பராமரிப்பதற்கும், ஊராட்சி பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதற்கென கூடுதல் பணியாளர்களை நியமித்து தூய்மையை பேணிகாக்கவும், ஆங்காங்கே குப்பை தொட்டிகளை அமைத்து, அக்குப்பைகளை பணியாளர்களை கொண்டு அவ்வப்போது அப்புறப்படுத்தவும், பக்தர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தேர் வரும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி மற்றும் தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்டவைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பொது சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி மருத்துவ முகாம்கள் அமைக்கவும் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வரும் பாதைகளை சீர்படுத்தவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், பக்தர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.கண்ணன், பழனி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.தனஜெயன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.நாகராஜன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.ராஜா, துணை இயக்குநர்(சுகாதாரபணிகள்) மரு.அனிதா, பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு.விவேகானந்தன், துணை ஆணையர் திரு.வெங்கடேஷ் உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.