Close

Paliyar Tribes Welfare – Meeting

Publish Date : 24/06/2024
.

செ.வெ.எண்:-43/2024

நாள்:-20.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

பளியர் இன மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற்றிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பளியர் இன மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற்றிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.06.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழக மக்களின் நலனுக்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பளியர் இன மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் அவர்களை சென்றடைவதற்கு, பளியர் இன மக்களின் தேவைகளை நேறைவேற்றுவது குறித்தும் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் வட்டத்தில் 4 கிராமங்களில் 92 நபர்களும், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 2 கிராமங்களில் 100 நபர்களும், பழனி வட்டத்தில் 6 கிராமங்களில் 206 நபர்களும், கொடைக்கானல் வட்டத்தில் 16 கிராமங்களில் 4225 நபர்களும் என மொத்தம் 4,623 நபர்கள் வசித்து வருகின்றனர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சாதிச்சான்றிதழ் உட்பட வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள், வீட்டுமனைப் பட்டா, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பட்டா மாறுதல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்டங்களும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் கலைஞர் கனவு இல்லம், ஜல்ஜீவன் மிசன், ஊரக சாலைகள், தெருவிளக்குகள், தனிநபர் மற்றும் சமுதாய கழிப்பறை வசதிகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் போன்ற திட்டங்களும், மகளிர் திட்டம் சார்பில் கடனுதவிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன உரிமைகள், கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம், தொழில் கடனுதவிகள், பள்ளிக் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடிக்கல்வித் திட்டம், பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கான திட்டம், வனத்துறை சார்பில் வனத்துறை தொடர்பானவை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை, சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள், சுகாதார காப்பீடு திட்டம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மருத்துவக் காப்பீடு திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம், நுண்நீர் பாசனம், தோட்டக்கலை திட்டங்கள், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், சமூக நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, தடுப்பூசிகள், பழங்குடியின குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விளையாட்டு உபகரணங்கள், மாவட்ட தொழில் மையம் மூலம் கடனுதவிகள் மற்றும் பயிற்சிகள், நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால்துறை சார்பில் நகர்ப்புற சாலை மேம்பாடு, தெருவிளக்குகள், குடிநீர், கழிப்பறை வசதிகள், கூட்டுறவுத்துறை சார்பில் நியாயவிலைக்கடைகள் மூலம் குடிமைப்பொருட்கள் விநியோகம், புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், மின்சார வாரியம் சார்பில் மின் இணைப்புகள் மற்றும் பராமரிப்பு, போக்குவரத்துத்துறை சார்பில் பேருந்து வசதிகள், நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் பல்வேறு தொழிலாளர் நலவாரியங்கள் வாயிலாக நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசின் நலத்திட்டங்கள் பளியர் இன மக்களை சென்றடைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கொடைக்கானல் வட்டத்தில், கொடைக்கானல் உள்வட்டத்திற்குட்பட்ட வில்பட்டி, பூம்பாறை, கூக்கால், மன்னவனுார், பூண்டி ஆகிய வருவாய் கிராம பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.ம.செல்வம், பண்ணைக்காடு உள்வட்டத்திற்குட்பட்ட அடுக்கம், வடகவுஞ்சி, பண்ணைக்காடு, பூலத்துார், வெள்ளகவி ஆகிய வருவாய் கிராம பகுதிகளுக்கு கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவராம், தாண்டிக்குடி உள்வட்டத்திற்குட்பட்ட தாண்டிக்குடி, காமனுார், கே.சி.பட்டி, பாச்சலுார் ஆகிய வருவாய் கிராம பகுதிகளுக்கு உதவி ஆணையர்(கலால்) திரு.பால்பாண்டி, திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில், திண்டுக்கல் கிழக்க உள்வட்டத்திற்குட்பட்ட சிறுமலை வருவாய் கிராமத்திற்கும், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில், தருமத்துப்பட்டி உள்வட்டத்திற்குட்பட்ட பன்றிமலை, ஆடலுார், பழையகன்னிவாடி, சத்திரப்பட்டி, கோம்பை, செட்டிநாயக்கன்பட்டி ஆகிய வருவாய் கிராம பகுதிகளுக்கும் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், பழனி வட்டத்தில் ஆயக்குடி உள்வட்டத்தில் குட்டிக்கரடு, பழனி உள்வட்டத்தில் பாலசமுத்திரம், நெய்காரப்பட்டி உள்வட்டத்தில் பெரியம்மாப்பட்டி, பாம்பம்பட்டி உள்வட்டத்திற்குட்பட்ட காவலப்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய வருவாய் கிராம பகுதிகளுக்கு பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், ஒட்டன்சத்திரம் வட்டத்தில், ஒட்டன்சத்திரம் உள்வட்டத்திற்குட்பட்ட வடகாடு வருவாய் கிராமத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி ஜெயசித்ரகலா என அந்தந்த பகுதிக்கு பொறுப்பு அலுவலர்கள் தலைமையில் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினரின் கள ஆய்வுப் பணி 24.06.2024 அன்று தொடங்கி மேற்கொள்ளப்படவுள்ளது,

இந்த பொறுப்பு அலுவலர்கள் தலைமையிலான குழுவினர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பளியர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று, கள ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிக்கு பளியர் இன மக்களின் இருப்பிடம், அவர்கள் வசிக்கும் வீட்டின் வகை(குடிசை, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு, ஆஸ்பெட்டாஸ் கூரை, மண் வீடு) குறித்த விபரங்கள், பட்டா இடமா, புறம்போக்கு இடமா, நில வகைபாடு, அரசு நிதியுதவித் திட்டங்கள் வாயிலாக வீடு கட்டப்பட்டுள்ளதா, வீட்டின் தற்போதைய நிலை, பராமரிப்பு தேவைகள் உள்ளிட்ட விபரங்கள், வாடகை வீடு எனில், வாடகை விபரங்கள், வீடு கட்ட நிலம் உள்ளதா, நிலம் உள்ளது எனில் அந்த இடத்தில் வீடு கட்டிக்கொள்ள அரசு உதவி தேவைப்படுகிறதா, நிலம் இல்லை எனில் நிலம் தேவை உள்ளதா, அவர்களின் தொழில், ஆண்டு வருமானம், விவசாய தொழில் எனில் சொந்த விவசாய நிலம் உள்ளதா, விவசாய கூலி தொழிலாளர்களா, குடும்ப உறுப்பினர்கள், அவர்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி, ஆரம்ப சுகாதார நிலையம், நியாயவிலைக்கடை, மயான வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்த விவரங்கள், அவர்களின் தேவைகள், தனிநபர் வனஉரிமை ஆவணம், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், நலவாரிய உதவித்தொகை போன்ற அரசின் திட்டங்களின் கீழ் பயனடைந்துள்ளார்களா என்பது குறித்தும், அவர்களுக்கான குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, சாதிச்சான்று, மருத்துவக் காப்பீடு அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பிறப்புச் சான்று உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, அவ்வாறு இல்லையெனில் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கவும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, சாதிச்சான்று, மருத்துவக்காப்பீடு அட்டை கிடைத்திட இணைய வழியில் விண்ணப்பித்து அவர்களுக்கு கிடைக்கச் செய்திட பொறுப்பு அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் நடவடிக்கை மேற்கொள்வர். அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் விடுபடாமல் கிடைத்திட, பளியர் இன மக்களுக்கு சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளனர், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.சக்திவேல், திரு.சௌ.சரவணன், திரு.சிவராம், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி ஜெயசித்ரகலா, உதவி ஆய்வாளர்(கலால்) திரு.பால்பாண்டி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.