School Management committee (SMC)

செ.வெ.எண்:- 06/2024
நாள்: 03.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011-இன் படி, பள்ளி மேலாண்மைக்குழுவானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்தல் அவசியம். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,315 அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நான்கு கட்டங்களாக பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 02.08.2024 அன்று அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு குறித்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக்கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, முதல்கட்டமாக 10.08.2024 அன்று 475 அரசு தொடக்கப்பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக 17.08.2024 அன்று 471 அரசு தொடக்கப்பள்ளிகளிலும், மூன்றாம் கட்டமாக 24.08.2024 அன்று 167 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும், நான்காம் கட்டமாக 31.08.2024 அன்று 200 அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 2 அரசு மேல்நிலைப்பள்ளிகள் என 202 அரசுப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1315 பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வியின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளியின் வளர்ச்சி, பள்ளியின் தரம், ஆசிரியர்களின் வருகை, கற்பித்தல், தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை பார்த்து, அறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு, சீருடை, பாடநூல் உள்ளிட்ட அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதை உறுதி செய்து, சமுதாயத்துக்கும் பள்ளிக்கும் தொடர்பு ஊடகமாக இருக்க வேண்டும். அனைத்து பள்ளி குழந்தைகளையும் (6 முதல் 14 வயது) பள்ளியில் சேர்ப்பது, அத்தோடு அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். மாற்றுதிறனாளிகள், குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்கள் கல்வியைத் தொடரும் வகையிலான வசதிகள் மற்றும் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துதல் மற்றும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துதல் ஆகிய பணிகளை பள்ளி மேலாண்மைக்குழு மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி மேலாண்மைக்குழுவானது மாதம் ஒருமுறை மற்றும் தேவைப்படும் நேர்வுகளில் அடிக்கடி ஒன்றுகூடி, பள்ளி வளர்ச்சித்திட்டங்களை தீர்மானித்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உறுப்பினர்கள் வருகையையும், பள்ளிக்குத் தேவையான அவசரகாலத் திட்டமிடல்களையும் பெற்றோர் செயலியில் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் 24 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவானது மாதம் ஒருமுறை கூடி மாவட்ட அளவிலான பள்ளிகளின் தேவைகளை மதிப்பீடு செய்து, சார்ந்த துறைகள் மூலம் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செயல்படும்,
பள்ளி மேலாண்மைக் குழுவினுடைய முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகளை அனைவரும் அறிந்து, குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக திறம்பட செயல்பட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.இரா.புண்ணியகோடி, திண்டுக்கல் மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) திருமதி அமுதா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.