Self Employment Training-RSETI
செ.வெ.எண்:-04/2024
நாள்:-03.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
திண்டுக்கல் மாவட்டம், அடியனுாத்து கிராமத்தில் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(03.12.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அழகுக்கலை பயிற்சி பெறும் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் “ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம்“ அடியனுாத்து கிராமத்தில் (சிறுமலை பிரிவு) செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் ஆடு வளர்ப்பு, பால் வளம் பெருக்குதல், கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பேப்பர் கப், அப்பளம், ஊறுகாய், ஊதுபத்தி போன்றவை தயாரித்தல், பெண்களுக்கான நகை அணிகலன் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி உட்பட 20 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் வாயிலாக ஆண்டுதோறும் 1000 நபர்களுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் இதுவரை சுமார் 600 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், பயிற்சி முடித்தவர்கள் சுயமாக தொழில் தொடங்கிட கடன் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்து, அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.
தற்போது, இந்த மையத்தில் பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சியில் 35 நபர்களும், கம்ப்யூட்டர்(டாலி) பயிற்சியில் 30 நபர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்கிட ஆர்வமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இதுபோன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி பெற்று, சுயதொழில் தொடங்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஜி.அருணாச்சலம், “ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம்“ இயக்குநர் திரு.குருசரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.