Sports Dept – Summer Training
செ.வெ.எண்: 72/2025
நாள்: 26.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
கோடைக்கால பயிற்சி முகாம் ஆய்வு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான கோடைக்கால இலவச பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புற மாணவர்களிடையே விளையாட்டுத்திறனை மேம்படுத்திடும் வகையிலும், விளையாட்டுத்திறனை ஊக்குவித்திடும் வகையிலும் விளையாட்டுத் துறைகளில் பல்வேறு சிறப்புத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்து வருகிறார்கள். மேலும், மாண்புமிகு துணை முதலமைச்சரின் சீரிய முயற்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன், மூலம், தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பெருமளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்கள்.
விளையாட்டு துறை சார்பாக பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், பேரறிஞர் அண்ணா விரைவு சைக்கிள் போட்டிகள், பேரறிஞர் அண்ணா மராத்தான் போட்டிகள், அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், நீச்சல் கற்பித்தல் பயிற்சி முகாம் மற்றும் கோடைகால பயிற்சி முகாம் என பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
பயிற்சி மற்றும் செயல் திறனை மேம்படுத்துவதில் இருப்பிட பயிற்சியின் பங்கு ஈடுஇணையில்லாதது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாநிலத்தில் விளையாட்டு விடுதிகளை நிறுவி, மாணவர்களின் விளையாட்டு நுணுக்கம் மற்றும் திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சிகளை வழங்குகிறது. விளையாட்டு விடுதிகளை மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.
விளையாட்டு விடுதிகளில் அறிவியல் பூர்வமான விளையாட்டுப் பயிற்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகள், உண்டு உறைவிட வசதிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் தங்களது கல்வியினை அருகில் உள்ள பள்ளிகளில் தொடரலாம். தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் 27 விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு மாணவிக்கு ஒரு நாளுக்கு ரூ.250 வீதம் உணவு மானியம் வழங்கப்படுகிறது. மாணவிகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. நாள்தோறும் அசைவ உணவு, பருவ கால பழ வகைகள், இனிப்புகள், உலர்ந்த பழங்கள், பால், முட்டை சிற்றுண்டிகள், சத்துமாவு கஞ்சி போன்ற சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக 2025-26ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் கோடைக்கால இலவச பயிற்சி முகாம் 25.04.2025 முதல் 15-05-2025 வரை 21 நாட்கள் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலையில் 4.00 மணி முதல் 6.30 வரையிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, தடகளம், கூடைப்பந்து, கையுந்துப்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டு பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டரங்கத்திலும், கால்பந்து விளையாட்டு பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டரங்கம் மற்றும் மலைக்கோட்டை விளையாட்டு மைதானத்திலும் (இருபாலருக்கும்) நடைபெற்று வருகிறது. மேற்காணும் இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது பயிற்சி பெற்று வந்த மாணவ, மாணவிகளிடம் பயிற்சியை பற்றி கேட்டறிந்து கலந்துரையாடினார். மேலும் விளையாட்டரங்கத்தில் உள்ள இயற்கை புல் தரை கால்பந்து மைதானம், தடகள ஓடுதளம், அலுவலகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் (மதுரை மண்டலம்) திரு. வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.சிவா மற்றும் பயிற்றுநர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.