Close

Sports – Kabirpuraskar Award

Publish Date : 12/12/2024

செ.வெ.எண்:-28/2024

நாள்:-10.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) கபீர் புரஸ்கார் விருதினைப் பெறத் தகுதியுடையவராவர். இவ்விருதானது, ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில் தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5000 க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.

2025-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 15.12.2024 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 26.01.2025 குடியரசு தினத்தன்று விருது வழங்கி கௌரவிக்கப்படுவர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை் நகல் 2 பிரதிகளுடன், “மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் – 624004” என்ற முகவரியில் 15.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, தொலைபேசி எண் – 7401703504 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.