SSLC examination – collector inspection

செ.வெ.எண்:-76/2025
நாள்:28.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(28.03.2025) தொடங்குகின்றன. திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்பொது, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 28.03.2025 அன்று தொடங்கி 15.04.2025 வரை நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைச் சார்ந்த 10,838 மாணவ, மாணவிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த 9,761 மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 4,523 மாணவ, மாணவியர்கள் என 12,599 மாணவர்கள் மற்றும் 12,523 மாணவிகள் என மொத்தம் 25,122 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
இதில், திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவில் 65 தேர்வு மையங்களில் 15,953 மாணவ, மாணவியர்கள், பழனி கல்வி மாவட்ட அளவில் 47 தேர்வு மையங்களில் 9,169 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
மாவட்ட அளவில் 10 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பறக்கும் படை அமைக்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களும் கண்காணிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர்கள் தலைமையில் 224 மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் பறக்கும் படை உறுப்பினராக நியமிக்கப்பட்டு தேர்வு நன்முறையில் நடைபெறுவதை கண்காணித்து வருகின்றனர்.
அனைத்து தேர்வு மையங்களுக்கும் உரிய நேரத்தில் வினாத்தாள் சென்றடைய 27 வழித்தட அலுவலர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வுப்பணியில் 120 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மைக் கண்காணிப்பாளராகவும், 120 பட்டதாரி ஆசிரியர்கள் துறை அலுவலர்களாகவும், 1,256 ஆசிரியர்கள் தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களாகவும் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தனித்தேர்வர்கள் தேர்வு எழுத திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவில் நான்கு மையங்களும், பழனி கல்வி மாவட்ட அளவில் நான்கு தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 655 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
மாற்றுத்திறனாளிக்கான சலுகை கோரி திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 130 பேர் மற்றும் பழனி கல்வி மாவட்டத்தில் 147 பேர் என மொத்தம் 277 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சொல்வதை எழுதுபவர் நியமனம் மற்றும் கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வினை நன்முறையில் எழுத மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான போக்குவரத்து வசதி, அவசரகால மருத்துவ வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி தேர்வறையில் மின்சார வசதி போன்றவை மாவட்ட நிர்வாகத்தினால் அனைத்து துறைகளுடன் இணைந்து நன்முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையத்திலும் தேர்வு நேரத்தில் பாதுகாப்பு கருதி காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை இணைந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை சிறப்பாக நடத்திட அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.