Students Exposure Visit
செ.வெ.எண்:-74/2025
நாள்:-22.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் ‘சுற்றுச்சூழல் விழிப்புணர்வு களப்பயணம்’ – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, வனத்துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நட்பு வாழ்க்கை முறையை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ‘சுற்றுச்சூழல் விழிப்புணர்வு களப்பயணம்’ திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திலிருந்து களப்பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(22.07.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இன்றைய ஒருநாள் களப்பயணத்தில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி, கடந்த ஜுன் 5-ஆம் தேதி நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின போட்டிகளில் வெற்றி பெற்ற 7-ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் 80 மாணவ, மாணவியர் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் இக்களப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். களப்பயணம் துவங்குவதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவ, மாணவிகள் தங்கள் களப்பயணம் குறித்த ஆர்வம், வானிலை ஆராய்ச்சி மையம், சுற்றுச்சூழல் சுற்றுலா தளங்களைப் பார்வையிட உள்ளது குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
முதலாவதாக மாணவ, மாணவிகள் கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி மையத்தை பார்வையிடவும், விஞ்ஞானிகளுடன் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி தொடர்பாக கலந்துரையாடவும் உள்ளனர். அதன் பின்னர், சூழலியல் தொடர்பாக பைன் காடுகள், பில்லர் ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக் பகுதிகளை மாணவ, மாணவிகள் பார்வையிட உள்ளனர். பிரையண்ட் பூங்காவை பார்வையிட்ட பின், மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் மீளாய்வு நடத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ்குமார், இ.வ.ப., முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.