Close

Summer – Preventive of Dehydration Related

Publish Date : 29/04/2024
.

செ.வெ.எண்:-54/2024

நாள்:-26.04.2024

திண்டுக்கல் மாவட்டம்

தகிக்கும் வெயிலால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க 216 இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகிக்கும் வெயிலால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. “அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும், வெப்ப அலையும் ஏற்படக்கூடும்“ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகையசூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

இந்திய வானிலை ஆய்வுமைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். மருத்துவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனைகளின் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகை சூழலில் அரசு நிர்வாகமானது கவனத்துடனும் பாதுகாப்பு உணர்வுடனும் செயல்பட அனைத்து அதிகாரிகளுக்கும் அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சமூகநல மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், தொற்றுநோய் மருத்துவமனைகள் ஆகியவை வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகளும் இங்கு கையிருப்பில் உள்ளன. வெப்ப அலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக மனிதனின் சாதாரண உடல் வெப்ப நிலை சுமார் 37 டிகிரி சென்டி கிரேடு (36.1-37.8 C) ஆகும். 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், கைக்குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், இளம்சிறார்கள் மற்றும் நாட்பட்ட உடல் நலக்குறைபாடு உள்ளவர்கள் அதிக வெப்பம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகக் கூடும். கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

வெயில் காலங்களில் தோலில் சிறுசிறு கொப்பளங்கள், வீக்கம், வெப்ப பிடிப்புகள், சூடான மற்றும் வறண்ட தோல் தடிமம், சோர்வடைதல், வெப்ப பக்கவாதம், வறண்ட தோல் நோய், அதிகமான தாகம், வாந்தி, தலை வலி, பலவீனம், உடற் சோர்வு, சிறுநீர் அளவு குறைதல், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் எரிச்சலுடன் (கடுத்து) போதல், அதிக / இல்லாத வியர்வை, தசைப்பிடிப்பு, லேசான தலை சுற்றல், வலிப்பு போன்ற நோய்கள் வெயில் காலங்களில் ஏற்படலாம்.

எனவே, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான தண்ணீர் குடிக்க வேண்டும். தேநீர், காபி, கார்போனைட் குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கஞ்சி, ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் போன்ற குளிர் பானங்களை பருக வேண்டும். பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும். பணி நேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருக வேண்டும். கடினமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டவுடன் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். கோடை காலங்களில் மெல்லிய தளர்ந்த கதர் ஆடைகளை அணிய வேண்டும். தேவையெனில் துணிகளை ஈரப்படுத்தி கழுத்து மற்றும் கைகளில் துடைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது குடை வைத்துக்கொள்ள வேண்டும். காலணிகள் அணியாமல் வெளியே செல்லக்கூடாது. இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு சிறுநீர் மஞ்சள் நிறமாக இருப்பதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். மயக்கம் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து கோடை காலங்களில் வரும் நோய்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, 12 அரசு மருத்துவமனைகள், 11 தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள், 73 அரச ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 346 துணை சுகாதார நிலையங்களில் வெப்பச்சலனம் மற்றும் நீர்ச்சத்து குறைவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருந்து கிடங்கில் 2,00,000 ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் மற்றும் 1,05,000 ஐவி மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மாவட்டம் முழுவதும், சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 40,427 ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள், 32,725 ஐவி மருந்துகள் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தகவல் மற்றும் அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் சேவை – 108, சுகாதார உதவிக்கு -104 மற்றும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை(பொதுசுகாதாரம்) 0451-2432817 தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

பொதுமக்கள் சிறு பிரச்சனை என்றாலும் சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனை பெற்று தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும்போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச் செல்ல வேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சை பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்க வேண்டும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும். சிறு பிரச்னை என்றாலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.

தொழிற்சாலைகள், கட்டடப்பணி, கல் குவாரி மற்றும்சாலை அமைத்தல் போன்ற திறந்த இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியாளர்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிப்படையாத வகையில், பணி நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்கிட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் பேருந்து நிலையம் கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதி, ஏஎம்சி சாலையினல் சாகர் மருந்தகம் அருகில், வெள்ளை விநாயகர் கோயில் அருகில், கோட்டைக்குளம் சாலை(காந்தி சந்தை எதிர்புறம்) , திருச்சி சலையில் அரசு மருத்துவமனை அருகில் மற்றும் புனித வளனார் மருத்துவமனை அருகில், ஆர்எஸ் சாலை சௌராஷ்டிரா பள்ளி அருகில், சந்தை சாலை, மீன் சந்தை அருகில் சங்கரதாஸ் சுவாமி சிலை அருகில், நாகல் நகரில் இரயில் நிலையம் ஆகிய 11 இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு நீர், மோர் வழங்கப்படுகிறது.

பழனி நகராட்சி பகுதிகளில் பேருந்து நிலையம் மேற்கு பகுதி, பேருந்து நிலையம் நுழைவு வாயில் வெளிபுறம், இரயில் நிலைய சாலையில் தந்தை பெரியார் சிலை அருகில், ஆண்டவர் பூங்கா சாலையில் தேவர் சிலை அருகில், வேல் ரவுண்டானா அருகில், காந்தி சாலையில் பழைய நகராட்சி அலுவலகம் அருகில், நகராட்சி தினசரி தற்காலிக சந்தை அருகில் என 7 இடங்களில் தலா 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகளுடன் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதுதவிர பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், 23 பேரூராட்சி பகுதிகளில், அகரம் பேரூராட்சிக்குட்பட்ட சுக்காம்பட்டி நால்ரோடு, உலகம்பட்டி புனித அந்தோனியார் கோவில், முத்தாலம்மன் கோவில் ஆகிய 3 இடங்களிலும், அம்மையநாயக்கனுார் பேரூராட்சிக்குட்பட்ட கொடைரோடு பேருந்து நிலையம், அம்மையநாயக்கனுார் பேருந்து நிறுத்தம், டோல்கேட் ஆகிய 3 இடங்களிலும், ஆயக்குடி பேரூராட்சிக்குட்பட்ட பழைய ஆயக்குடி சந்தைப்பேட்டை, புது ஆயக்குடி பேருந்து நிலையம், கொய்யா சந்தை ஆகிய 3 இடங்களிலும், அய்யலுார் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிறுத்தம் வடக்கு மற்றும் தெற்கு, தங்கம்மாபட்டி ஆகிய 3 இடங்களிலும், அய்யம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட காமராஜர் பேருந்து நிலையம், சின்ன அய்யம்பாளையம் அரசமரம் பேருந்து நிறுத்தம், வேப்பமரம் பேருந்து நிறுத்தம் ஆகிய 3 இடங்களிலும், பாலசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பேரூராட்சி அலுவலகம் முன்புறம், 8-வது வார்டு கலையரங்கம், 15-வது வார்டு எல்லை கருப்பணசாமி கோவில் அருகில், வரதமாநதி அணை செல்லும் சாலை ஆகிய 4 இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வத்தலகுண்டு பேரூராட்சிக்குட்பட்ட தபால் நிலையம் முன்புறம், காளியம்மன் கோவில், பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை பேருந்து நிறுத்தம், மதுரை சாலை பேருந்து நிறுத்தம் ஆகிய 5 இடங்களிலும், சின்னாளப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், பூஞ்சோலை பேருந்து நிறுத்தம், சின்னாளப்பட்டி பிரிவு, சேவா சங்கம் தெரு ஆஞ்சநேயர் கோவில் அருகில் ஆகிய 4 இடங்களிலும், எரியோடு பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிறுத்தம், திண்டுக்கல் சாலை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் என 3 இடங்களிலும், கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம், 12வது வார்டு கருப்புசாமி கோவில் ஆகிய 3 இடங்களிலும், கீரனுார் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம், பெரியசாவடி ஆகிய 3 இடங்களிலும், நத்தம் பேரூராட்சிக்குட்பட்ட கொட்டாம்பட்டி காந்தி கலையரங்கம், செந்துரைசாலை பேருந்து நிறுத்தம், நத்தம் புதிய பேருந்து நிலைய வளாகம், கக்கன் பூங்கா எதிரில் என 4 இடங்களிலும், நெய்காரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிறுத்தம், பெட்ரோல் பங்க், ராயர் பேக்கரி எதிர்புறம் ஆகிய 3 இடங்களிலும், நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், சங்கரன் சிலை அருகில், நால்ரோடு ஆகிய 3 இடங்களிலும், பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் பேருந்து நிறுத்தம், குஜிலியம்பாறை பேருந்து நிறுத்தம், பாளையம்-திருச்சி சாலை ஆகிய 3 இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர பண்ணைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட மச்சூர் பேருந்து நிறுத்தம், ஊத்து பேருந்து நிறுத்தம், வாழகிரி, மூலையார், வடகரைபாறை ஆகிய 5 இடங்களிலும், பட்டிவீரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ரேடியோ மைதானம், பேரூராட்சி அலுவலகம், அண்ணாநகர் பேருந்து நிறுத்தம், சேவுகம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட மு.வாடிப்பட்டி பேருந்து நிறுத்தம், அய்யம்பாளையம் சாலை அ பிரிவு, பேரூராட்சி அலுவலகம் அருகில் ஆகிய 3 இடங்களிலும், சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிறுத்தம் கடைவீதி பெருமாள் கோவில் அருகில், சேடப்பட்டி ஆகிய 3 இடங்களிலும், ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிறுத்தம்-1, பேருந்து நிறுத்தம்-2, திருமலைராயபுரம் ஆகிய 3 இடங்களிலும், தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட பேரூராட்சி அலுவலகம், கரூர் நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் ஆகிய 2 இடங்களிலும், வடமதுரை பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிறுத்தம் அருகில், சார் பதிவாளர் அலுவலகம் அருகில், காவல் நிலையம் அருகில் பயணியர் நிழற்குடை அருகில் என 3 இடங்களிலும், வேடசந்துார் பேரூராட்சிக்குட்பட்ட காமராஜர் பேருந்து நிலையம், ஆத்துமேடு பேருந்து நிறுத்தம், சந்தை சாலை ஆகிய 3 இடங்களிலும் என 23 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 75 இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட வெள்ளி நீர்வீழ்ச்சி, பேருந்து நிலையம், அப்சரவேட்டரி, போகல்ஸ்வால்க் ஆகிய 4 இடங்களிலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, சோதனைச்சாவடி ஆகிய 3 இடங்களிலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 115 இடங்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் 216 இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் வெயில் பாதிப்பின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.