Close

Summer – Preventive of Heat – Animal Husbandry

Publish Date : 29/04/2024

செ.வெ.எண்:-55/2024

நாள்:-26.04.2024

திண்டுக்கல் மாவட்டம்

கோடைகால வெப்பத்தின் தாக்கத்திலிருந்து கால்நடைகளை பாதுகாத்திட உரிய வழிமுறைகளை பின்பற்றிட கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோடைகால நோயிலிருந்து தங்களது கால்நடைகளை கால்நடை பராமரிப்புத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி பாதுகாத்திடலாம்.

வெப்பத்தின் தாக்கத்தால் கால்நடைகளுக்கு குறிப்பாக கறவை பசுக்களில் ஏற்படும் உடல் அயற்சியை தடுப்பதற்கு கறவைப் பசுக்களின் மேய்ச்சல் நேரத்தை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையிலும் என மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். கோடையில் பால் உற்பத்தியும், சினைமாடுகளில் கன்று வளர்ச்சியும் குறைய வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க போதுமான அளவு பசுந்தீவனம் மற்றும் பசும் புல் வழங்க வேண்டும். மதியவேளையில் பசுக்களை குளிப்பாட்டுவதன் மூலமும் உடல் வெப்பத்தை தணித்து பால் உற்பத்தி குறையாமல் பாதுகாக்கலாம்.

உலோகம், கல்நார் மற்றும் கான்கிரீட் கொட்டகையில் வெப்பத்தை தணிக்க கொட்டகையின் மேல்புறத்தில் தென்னங்கீற்றுகள், பனை ஓலைகள், ஈரப்படுத்தப்பட்ட சாக்குத்துணிகள், விரைவாய் வளரும் பசுங்கொடிகள் ஆகியவற்றை பரவ விடுதல் வேண்டும். மேலும் அவற்றில் அவ்வப்போது தண்ணீர் தெளித்துவிடுதல் அவசியம். வாய்ப்பிருந்தால் மின்விசிறி மற்றும் நீர் தெளிப்பானை பயன்படுத்துவதன் மூலம் கொட்டகையில் வெப்பத்தின் அளவை குறைக்கலாம். கால்நடைகளுக்கு ஏற்படும் கோடைகால அயற்சியை போக்க அதிக அளவு குளிர்ந்த குடிநீர் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் குடிநீரில் தாது உப்பு மற்றும் வைட்டமின் டானிக் கலந்து கொடுக்க வேண்டும்.

கோடைகாலத்தில் குறைந்தது 3 முறையேனும் தண்ணீர் வழங்குதல் அவசியம். மேலும் இந்த கோடை காலத்தில் மடிவீக்க நோய் மற்றும் பிறகிருமி தொற்றுகள் வராமல் தவிர்க்க பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஒரு சதவீதம் கரைசலை பயன்படுத்தி கொட்டகை மற்றும் மாட்டின் மடியை கழுவி தூய்மை செய்ய வேண்டும். கொட்டகை இல்லாதவர்கள் கால்நடைகளை வெயிலில் கட்டாமல் நிழல்தரும் மரங்களின் கீழ் கட்ட வேண்டும்.

கால்நடைகளின் உற்பத்தி திறன் பாதிக்காவண்ணம் போதுமான அளவு அடர்தீவனம் கொடுப்பது அவசியமாகும். குறிப்பாக 3 லிட்டர் கறக்கும் கறவைப்பசு ஒன்றிற்கு 2 கிலோ அடர்தீவனம் வழங்குவதன் மூலம் அதன் உற்பத்தி திறன் குறைவை தவிர்க்கலாம். நார்சத்து நிறைந்த தீவனங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வழங்க வேண்டும். கோடை அதிகரித்து வரும் சூழலில் பசுந்தீவன பற்றாக்குறையை தவிர்க்கும் பொருட்டு ஊறுகாய் புல் தயாரித்து வைத்துக்கொள்வது சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.

அதிக வெப்பத்தால் கோழிகளுக்கும் வெப்ப அயற்சி நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. கோழிகள் திடீர் இறப்புக்குள்ளாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. இதனைத் தவிர்க்க வைட்டமின் சி மற்றும் நுண்ணூட்டம் நிறைந்த தண்ணீரை கோழிகளுக்கு கொடுக்க வேண்டும். மேலும் பசுவினங்களில் கோமாரி நோய், தோல்கழலை நோய் மற்றும் ஆடுகளில் ஆட்டுக்கொல்லி நோய் பரவும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. உண்ணிக்காய்ச்சல் அறிகுறிகள் தெரியும்பட்சத்தில் கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல், குறைந்த உணவு உட்கொள்ளுதல், அடர்மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், தோல் தன்பொழிவுத் தன்மையை இழத்தல், படபடப்புடன் அதிகப்படியான இதய மற்றும் சுவாசத்துடிப்பு, மூச்சு இரைப்பு, கருவிழி சுருங்கி உள்நோக்கி செல்லுதல், அதிக பசுந்தீவனத்தை மட்டும் விரும்பி உண்ணுதல், வெயிலில் நிழலைதேடி செல்லுதல், பாலில் திடத்தன்மை உற்பத்தி திறன் குறைதல், உடலில் நீர்ச்சத்து குறைபாட்டின் காரணமாக திடீரென மயங்கி விழுதல் போன்ற அறிகுறிகள் தென்படும் கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சை வழங்க வேண்டும்.

வெப்பஅயற்சி நோயால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு முதலுதவியாக பாதிக்கப்பட்ட கால்நடைகளை நிழற்பாங்கான பகுதியில் வைத்து பராமரிக்க வேண்டும். நனைந்த துணிகளை கால்நடைகளின் உடலில் சுற்றிவிட வேண்டும். குளிர்ந்த எலெக்ட்ரோலைட் நிறைந்த குடிநீரை பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு வழங்க வேண்டும். மேலும், ஒரே இடத்தில் அளவுக்கு அதிகமான கால்நடைகளை பராமரிப்பதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படின் காலம் தாழ்த்தாமல் அருகிலுள்ள கால்நடை மருந்தக மருத்துவரை அழைத்து உரிய சிகிச்சை வழங்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநரை 9445001114 என்ற கைபேசி எண்ணிலும், கால்நடைபெருக்கம் (ம) தீவனஅபிவிருத்தி துணை இயக்குநரை 9445032520 என்ற கைபேசி எண்ணிலும், கால்நடை நோய்புலனாய்வு பிரிவு உதவி இயக்குநரை 9445032608 என்ற கைபேசி எண்ணிலும், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்களை(திண்டுக்கல், பழனி மற்றும் கொடைக்கானல்) 9445032585, 9445001208, 9445032595 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.